சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்: ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 15 ஆயிரம் சேமிக்கும் அற்புதமான திட்டம்
Posted On:
01 MAR 2024 8:15PM by PIB Chennai
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்றால் என்ன?
நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய சக்தி மின்சாரத்தை தாயரிக்கும் இந்த அலகுகளை அமைக்கும் வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். ரூ. 75,021 கோடி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த லட்சியத் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை பிப்ரவரி 29ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். இரண்டு முதல் 3 கிலோ வாட் உற்பத்தித் திறனுக்கு கூடுதலாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறன் ஆகும்.
ஒரு கிலோ வாட் அமைப்புக்கு ரூ.30,000 மானியம் கிடைக்கும். இரண்டு கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 60,000மும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் அலகுக்கு ரூ.78,000மும் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன?
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். சூரிய சக்தி தகடுகளை அமைப்பதற்கு ஏற்ற வகையிலான கூரை கொண்ட சொந்த வீடு இருக்கவேண்டும். அந்த வீட்டிற்கு மின்சார இணைப்பு கட்டாயம் இருக்கவேண்டும். வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் சூரிய சக்தி மின்சாரத்திற்காக மானியம் பெறுபவராக இருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் எவ்வாறு சேர்வது?
இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுடையவர்கள் www.pmsuryaghar.gov.in. என்ற தேசிய தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மின்சார விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் மாநிலத்தை அதில் குறிப்பிட வேண்டும். இந்தத் தளத்தில், திட்டத்தில் சேர்வதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும். மேற்கூரை சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் நிறுவனங்களையோ அல்லது தனிநபர்களையோ நுகர்வோர் தேர்வு செய்து கொள்ளலாம்.
மின் நுகர்வோர் கடன் வசதி பெறமுடியுமா?
மின்சார நுகர்வோர் சோலார் மின் அமைப்புகளை நிறுவுவதற்கு கடன் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது. 3 கிலோ வாட் அமைப்புகளை நிறுவ 7 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்ததிற்கு ஏற்ப கடன் விகிதம் மாறுபடும். உதாரணத்திற்கு தற்போதைய 6.5% என்ற ரெப்போ வட்டி விகிதம், 5.5 % மாக குறைந்தால், இந்தத் திட்டத்தின் 7% வட்டி என்பது 6% மாக குறையும்.
மானியம் பெறுவதற்கான வழிமுறை என்ன?
மானியத்தை பெறுவதற்கு முதலில் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். மாநிலம் மற்றும் மின் விநியோக நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும். மின் இணைப்பு எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
இதனையடுத்து மின் இணைப்பு எண் மற்றும் செல்பேசி எண்ணை லாக் இன் செய்ய வேண்டும். படிவத்தின் அடிப்படையில் மேற்கூரை சூரிய சக்தி இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய அனுமதி பெற்றபின், பதிவு செய்துள்ள விற்பனையாளர் மூலம் சூரிய சக்தி தகடுகளை வீட்டின் மேற் கூரையில் நிறுவலாம். சூரிய சக்தி அளவு நிறுவப்பட்ட பின்பு அதன் விவரங்களைத் தெரிவித்து மீட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மின் விநியோக நிறுவனம், மீட்டரைப் பொருத்திய பின்பு அமைப்புச் சான்றிதழை இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நுகர்வோர் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை கேன்சல் செய்யப்பட்ட காசோலை மூலம் தளத்தில் தெரிவிக்கலாம். அடுத்த 30 நாட்களுக்குள் உங்களுக்கான மானியம் உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் வீடுகள் ஏன் சேர்க்கப்படுகின்றன?
மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பதற்காகவே இந்தத் திட்டத்தில் வீடுகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் உபரியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கானத் தொகையை மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து பெற்று கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம், 3 கிலோ வாட் சூரிய மின் சக்தி அலகை நிறுவி, மாதத்தில் 300 யூனிட் மின்சாரத்தை நுகரும் வீட்டுக்கு ஓராண்டில் தோராயமாக ரூ. 15 ஆயிரம் சேமிப்பை உத்தரவாதப்படுத்துகிறது. இத்தகையை வீடுகள் தங்களது சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்து, சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 1875 வரை சேமிக்கலாம்.
சோலார் அலகை நிறுவுவதற்கு பெறும் கடனுக்கான மாதாந்திர தவணையாக ரூ. 610 செலுத்தியப் பின்னர், மாதத்திற்கு ரூ. 1265 வீதம் தோராயமாக ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் மிச்சப்படுத்தலாம். கடன் பெறாத வீடுகளின் சேமிப்பு மேலும் அதிகமாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம், பசுமைப் பூமி என்னும் லட்சியத்திற்கான பங்களிப்பை வழங்கும் வாய்ப்பும் கிட்டும்.
***
(Release ID: 2010760)
Visitor Counter : 2511