சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார்.

Posted On: 05 FEB 2024 5:51PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிப் பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட சிக்மா கலந்தாய்வு அரங்கம் ஆகியவற்றைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை (05.02.2024) திறந்து வைத்தார். இக்கழகத்தின் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் உஷா நடேசன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. குலோத்துங்கன், கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 நிறுவனங்களுடன் (4 கல்வி நிறுவனம் மற்றும் 1 தொழில் நிறுவனம்) புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

1. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்

2. இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்

3. ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, புதுச்சேரி.

4. ஸ்ரீ பாலாஜி வித்யாபீடம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), புதுச்சேரி

5. ஓஜிஓ எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட், நொய்டா

மேலும் இத்திறப்பு விழாவின்போது மானியப் பயிற்சித் திட்டங்களுக்கான தொடக்கமாக தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த இரண்டு நாள் பயிற்சித் திட்டமும் தொடங்கப்பட்டது.

சமூகத்தின் நலிந்த பிரிவினரின், முதன்மையாக மீனவ சமூகத்தினரின் திறன் மேம்பாடு மற்றும் நிதி மேம்பாட்டிற்காக மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்விப்புலத் தலைவர்கள், இணைத் தலைவர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மத்திய பொதுப்பணித்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

 •         அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் 1033 சதுர டியில் சுமார் 72.30 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது. இது "தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் ஆகியவற்றின் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பட்டியல் சமூகத்தின் சமூக - பொருளாதார மேம்பாட்டிற்கான மையம்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை - சமபங்கு அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டுக்கான அறிவியல் பிரிவானது சுமார் 99.98 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

•          இயந்திர பொறியியல் ஆராய்ச்சி பயன்பாடு மையமானது ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஆலோசனை உபகரணங்களை வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மையத்தில் சுமார் 3.2 கோடி செலவில் 25 டன் எடைக்கொண்ட டைனமிக் யுனிவர்சல் சோதனை இயந்திரம் நிறுவப்படவுள்ளது. இது பல்வேறு பொறியியல் பயன்பாடுகளில் உள்ள பொருட்களின் வலிமையை சோதிக்க பயன்படும். இது தவிர, சுமார் 75 லட்சம் செலவில் கனரகப் பொறியியல் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் கியர் டெஸ்ட் ரிக் ஒன்றும் இதில் நிறுவப்படவுள்ளது.

•          சிக்மா கலந்தாய்வு அரங்கமானது 120 பேர் அமரும் வகையில் சுமார் 16 லட்சம் செலவில் குளிரூட்டப்பட்ட அரங்கமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கமானது ஒரு மேடை, புரொஜெக்டர் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளுக்குத் தேவையான பிற அம்சங்களைக் கொண்டுள்ளது.

    

 

    

***

SMB/KRS

 



(Release ID: 2002711) Visitor Counter : 48


Read this release in: English