சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

முதன்முறையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மி.மீ. துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்த மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி செயல்பட உள்ளது

Posted On: 05 FEB 2024 2:17PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்   (ஐஐடி மெட்ராஸ்), இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மிமீ துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்த  பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இலக்கை எட்ட இம்முயற்சி உதவிகரமாக இருக்கும்.

155 மிமீ பீரங்கி குண்டுகளின் துல்லியத்தை அதிகரித்து பிழை ஏற்படும் சுற்றளவை 10 மீட்டர் தூரத்திற்குள் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். தற்போது இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ள பீரங்கி குண்டுகளின் பிழை ஏற்படும் சுற்றளவு 500 மீட்டராக உள்ளது.  தாக்கத்தை ஏற்படுத்தும் மையப்புள்ளியில் சேதத்தை அதிகரிப்பதும் இதன் மற்றொரு முக்கிய இலக்காகும்.

ஐஐடி மெட்ராஸ் வான்வெளிப் பொறியியல் துறையின் பேராசிரியர் ஜி.ராஜேஷ் தமது குழுவினருடன் இரண்டாண்டு காலத்தில் துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபட உள்ளார்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை விவரித்த மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு ரவி காந்த் கூறுகையில், “நாடு தற்சார்புஇலக்கை அடைவதில் இந்த முயற்சி பெரும் பாய்ச்சலை ஏற்படுத்துவதாக இருக்கும். உயர்தர வெடிமருந்து தயாரிப்பில் எம்ஐஎல் நிறுவனத்தின் பலமும், வழிகாட்டும் அமைப்பை மேம்படுத்துவதில் ஐஐடி மெட்ராஸ்-ன் திறமையும் இணைந்து, சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன பீரங்கி குண்டுகளை மேம்படுத்த  எம்ஐஎல் ஈடுபடுவதற்கு வழிவகுப்பது உறுதிஎனத் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் விண்வெளிப் பொறியியல் துறையின் பேராசிரியர் ஜி.ராஜேஷ் கூறும்போது, “சிறப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்படும் வழிகாட்டுஅமைப்பு, வழிசெலுத்தும் அமைப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இந்த வெடிமருந்தில் தனிமைப்படுத்தும் உத்திகள், கனார்டு ஆக்சுவேஷன் சிஸ்டம், ஃபுஸ், ஷெல் பாடி, வார்ஹெட் போன்ற அமைப்புகளும் இடம்பெறும். மினியேச்சர் செய்யப்பட்ட மின்னணு/சென்சார் மற்றும் மெக்கானிக்கல் கட்டமைப்புகள் போன்றவையும் இதில் இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள ஸ்மார்ட் புராஜக்டைல் இந்திய பிராந்திய வழிகாட்டும் செயற்கைக்கோள் அமைப்பில் வழிகாட்டலுக்காக பயன்படுத்தப்படும். வெளிநாட்டு அரசுகளின் செயற்கைக்கோள் அமைப்புகள் இன்றி சுதந்திரமாக செயல்பட முடியும் என்பது இதன் பொருள்என்றார்.

***

SMB/KV


(Release ID: 2002530) Visitor Counter : 119
Read this release in: English