கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

சென்னை - விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா - ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது

Posted On: 24 JAN 2024 1:47PM by PIB Chennai

சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கிற்கு சென்னைத் துறைமுக ஆணையம் இன்று (2024 ஜனவரி 24) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது.

இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். இதில் ரஷ்யா சார்பில் அந்நாட்டின் தூரக் கிழக்கு மற்றும் ஆர்க்டிக் பகுதி மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் திரு திரு அனடோலி யூரியேவிச் போப்ரகோவ் பங்கேற்றார்.

பயிலரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு துறைகளில் சிறந்த ஒத்துழைப்பு நிலவுவதாகக் கூறினார்.  கிழக்குக் கடல்சார் வழித்தடம் தொடர்பான இந்தக் கூட்டு முயற்சி, இருதரப்பு ஒத்துழைப்புக்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பு நிலையானது என்று கூறிய அவர், புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் அம்சங்கள் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாதிமிர் புதினுடன் தொடர்ந்து பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவ்வப்போது பேசி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பயிலரங்கில் பேசிய ரஷ்ய துணை அமைச்சர் திரு போப்ரகோவ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் , ரஷ்யா ஏற்கனவே 130 பில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பயிலரங்கில் பேசிய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சக செயலாளர் திரு டி கே ராமச்சந்திரன், கிழக்குக் கடல்சார் வழித்தடத்தின் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் திரு சுனில் பாலிவால் பேசுகையில், கிழக்குக் கடல் சார் வழித்தடத்தின் மூலம் இரு நாடுகளின் வர்த்தகம் மேம்படும் என்று குறிப்பிட்டார்.

இந்தப் பயிலரங்கில் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். பெட்ரோலிய அமைச்சகம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம், எஃகு அமைச்சகம் போன்றவற்றின் மூத்த அதிகாரிகளும், தொழில் துறைப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

ரஷ்யா சார்பில் அந்நாட்டின் கப்பல் போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரிகள் மற்றும் அந்நாட்டுத் தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

 

2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், இந்திய - ரஷ்ய கடல்சார் கூட்டு ஆணையத்தின் சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற இந்திய-ரஷ்ய பொருளாதார பேச்சுவார்த்தையின்போது கிழக்கு கடல்சார் வழித்தடம் தொடர்பான கொள்கை உருவாக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அமைச்சகத்தின் மூலம், சென்னைத் துறைமுக ஆணையத்தின் வாயிலாக இந்தியா - ரஷ்யா இடையேயான, சென்னை - விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தட செயல்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

***

AD/SMB/PLM/KPG/KRS



(Release ID: 1999070) Visitor Counter : 75


Read this release in: English