கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியா-ரஷ்யா இடையேயான சென்னை-விளாடிவோஸ்டோக் கிழக்குக் கடல்சார் வழித்தடத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பான பயிலரங்கில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
24 JAN 2024 2:02PM by PIB Chennai
வணக்கம்!
மாண்புமிகு ரஷ்ய தூர கிழக்கு மற்றும் ஆர்க்டிக் மேம்பாட்டுத் துணை அமைச்சர் திரு போப்ரகோவ் அவர்களே,
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன் அவர்களே,
ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளே, அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளே,
இந்தப் பயிலரங்கை நடத்தும் சென்னைத் துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு சுனில் பாலிவால் அவர்களே,
இந்த முதலாவது சென்னை-விளாடிவோஸ்டோக் கிழக்குக் கடல்சார் வழித்தடப் பயிலரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சென்னை வந்துள்ள ரஷ்யத் துணை அமைச்சர் திரு போப்ரகோவ் தலைமையிலான ரஷ்யக் குழுவினரை முதலில் வரவேற்கிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா - ரஷ்யா உறவு நிலையானது. இது புவிசார் அரசியல் நலன்கள், பரஸ்பர நன்மை பயக்கும் விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு புதினுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் பேச்சு நடத்தி வருகிறார். இந்தியாவும் ரஷ்யாவும் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பிற நிலைகளில் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர், 2023 டிசம்பரில் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
உத்திசார் திட்டங்கள், பொருளாதாரம், எரிசக்தி, ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளில் பன்முகத்தன்மை கொண்டதாக இந்தியா ரஷ்யா ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது.
இருதரப்பு வர்த்தகம் கடந்த நிதியாண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து, 50 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்த நிதி ஆண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழித் தொடர்பை மேம்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்யத் துணை அமைச்சர் திரு போப்ரகோவ் தலைமையிலான ரஷ்யக் குழுவின் சென்னை வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த உதவும்.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் இணைப்பு இருதரப்பு வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பரஸ்பரப் பொருளாதார மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்.
இந்த வழித்தடத்தின் மூலம், இந்தியாவுக்கும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிக்கும் இடையே சரக்குப் போக்குவரத்துக்கான நேரம் கணிசமாகக் குறையும். அதாவது, தூரத்தில் 40 சதவீதம் குறைவதோடு கால அளவில் 16 நாட்கள் குறையும்.
தற்போது, மும்பை துறைமுகத்திற்கும் சூயஸ் கால்வாய் வழியாக மேற்குக் கடல் பாதை மூலம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திற்கும் இடையே சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. இதன் தூரம் 16,066 கிலோ மீட்டராகும். சென்னைத் துறைமுகத்திலிருந்து கிழக்குக் கடல் சார் வழித்தடம் மூலம் விளாடிவோஸ்டோக் துறைமுகத்திற்கான தூரம் 10,458 கிலோ மீட்டர் மட்டுமே.
இது இரு நாடுகளுக்கும் இடையே சரக்குகளை கொண்டு செல்லும் திறனை பெருமளவில் அதிகரிப்பதுடன், போக்குவரத்து செலவைப் பெருமளவில் குறைக்க உதவும். நேரம், எரிபொருள் ஆகிய இரண்டுமே இதனால் சேமிக்கப்படும். மக்களுக்கு இடையிலான பிணைப்பையும் இது அதிகரிக்கும்.
சென்னைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய துணை அமைச்சர் திரு போப்ரகோவ் மற்றும் ரஷ்யக் குழுவினரை மீண்டும் ஒருமுறை வரவேற்கிறேன்.
நன்றி! ஜெய் ஹிந்த்!
--------
ANU/SMB/PLM/KPG/KRS
(Release ID: 1999067)
Visitor Counter : 63