சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மாநிலங்களில் பாயும் நதிகளில் உள்ள மாசுகளை அகற்றி சுத்தப்படுத்த மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு நமாமி கங்கா திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்து செயல்படுத்த வேண்டும்: மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 23 JAN 2024 7:00PM by PIB Chennai

அடுத்த 25 ஆண்டுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தொலை நோக்குத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நீர் இயக்கம் "நீர் தொலைநோக்குப் பார்வை @ 2047 – முன்னோக்கிய பயணம்" என்ற தலைப்பில் அகில இந்திய செயலாளர்கள் மாநாட்டை இன்று மாமல்லபுரத்தில் தொடங்கிவைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரம், பருவநிலைப் பின்னடைவுகள் மற்றும் நதிகளின் தூய்மை நிலை, நீர்ப் பயன்பாட்டுத் திறன், நீர் சேமிப்பு, மக்கள் பங்கேற்பு ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

மறுசுழற்சி மூலம் தண்ணீரை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், இந்தியா முழுவதும் உள்ள நிலத்தடி நீர் பரப்பளவு 25 லட்சம் சதுர கிலோ மீட்டர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 சதவீதம் குறைந்துள்ளதைக் கண்டறிந்து, மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் மூலம் தற்போது இது 10 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது என்றார்.

நீர்வள மேலாண்மையில் நீடித்த கொள்கையை வகுக்க, மத்திய-மாநில அரசுகள், கிராமப் பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து திட்டமிட வேண்டும் என்று  அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நிலத்தடி நீரை உயர்த்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்விவசாயத்தில் தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துப் பற்றாக்குறையைப் போக்க நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன், மத்திய நீர்வளத் துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு சந்தீப் சக்சேனா, மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர்கள், பல்வேறு மாநிலங்களின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நீர் தொடர்பான பிரச்சனைகளை ஒன்றிணைந்து சமாளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலாவது அகில இந்திய வருடாந்திர மாநில அமைச்சர்கள் மாநாடு 2023 ஜனவரியில் போபாலில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 33 மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் உற்சாகமான பங்கேற்பின் காரணமாக இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மாநில அமைச்சர்கள் 16 பேர் இந்தத் தொலைநோக்குப் பார்வை Vision@2047 குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மாநாட்டின் போது நடந்த விவாதங்களில் இருந்து 22 பரிந்துரைகள் பெறப்பட்டன. மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இந்த மாநாடு அரசுகளுக்கு இடையிலான தடைகளை அகற்றும் முதல் நடவடிக்கையாகும்.

இப்போது, ஜல் சக்தி அமைச்சகம் அகில இந்திய செயலாளர்களின் மாநாட்டை "நீர் தொலைநோக்குப் பார்வை@ 2047 – முன்னோக்கிய பயணம்என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள 22 பரிந்துரைகளை அமல்படுத்துவதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதே இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். முந்தைய மாநாட்டின் போது உருவாக்கப்பட்ட உத்வேகத்தைக் கட்டமைப்பதும், முந்தைய கட்டங்களில் பெற்ற ஆதாயங்களை ஒருங்கிணைப்பதும் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அமர்வுக்கும் பரந்த கருப்பொருள்களை அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது. இது பல்வேறு பங்குதாரர்களின் ஆதரவுடன் நீர்த் துறையில் உள்ள தடைகளை நீக்க உதவும்இது தொலைநோக்குப் பார்வையை Vision@2047 மிகவும் திறம்பட செயல்படுத்துவதற்கு நீர்த் துறையில் உள்ள தடைகளை அகற்றவும் உதவும்.

நீர்த் துறையில் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் வெற்றிகரமான திட்டங்களை எடுத்துரைப்பதற்கும், தொழில்நுட்ப வல்லுநர்கள் / பணியகங்கள் மற்றும் நீர்த் துறையில் பணிபுரியும் பிற பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கும் இந்த மாநாடு ஒரு தளமாக இருக்கும்.

    

    

**********

AD/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1998946) வருகையாளர் எண்ணிக்கை : 115
இந்த வெளியீட்டை படிக்க: English