சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது -எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை

Posted On: 08 JAN 2024 5:39PM by PIB Chennai

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆராய்ச்சியின் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது அதிகரிக்கும் வருவாய், இந்திய நடுத்தர வர்க்கத்தின் ஏற்றம் ஆகியவற்றின் மூலம் மேல்நோக்கிச் செல்கிறது.

 

2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டில் 70 மில்லியனில் இருந்து 2022-23-ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 74 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை கூறுகிறது.

 

2013-14, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபர் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமானவரி கணக்குத் தாக்கல் 295% அதிகரித்துள்ளது, இது மொத்த வருமானத்தின் அதிக வரம்பிற்கு இடம்பெயர்வதற்கான சாதகமான போக்கைக் காட்டுகிறது என்று எஸ்பிஐ அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் தாக்கல் செய்த வருமானவரி கணக்குத் தாக்கல்கள் எண்ணிக்கையும் இதே காலகட்டத்தில் சுமார் 3 மடங்கு (291%) அதிகரித்துள்ளது.

 

ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் முதன்மையான 2.5% வரி செலுத்துவோரின் பங்கு 2013-14-ம் ஆண்டில் 2.81 சதவீதத்திலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 2.28 சதவீதமாக குறைந்துள்ளது.

"2014-ம் நிதியாண்டில் மிகக் குறைந்த வருவாய் ஈட்டும் தனிநபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்பவர்களில் 36.3 சதவீதம் பேர் மிகக் குறைந்த வருமான வரம்பை விட்டு வெளியேறி மேல்நோக்கி நகர்ந்துள்ளனர். இதன் விளைவாக 2014-2021 நிதியாண்டில் அத்தகைய நபர்களுக்கு 21.1 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

 

அதிகரித்து வரும் பெண் தொழிலாளர் பங்கேற்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமான நிலைகளில் காணக்கூடிய சிறப்பம்சங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு பதிலாக நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர்களின் அதிகரித்த விற்பனை போன்ற  கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு மாறிவரும் நுகர்வு முறை ஆகியவை இந்தியாவின் வலுவான பொருளாதார மீட்சியை குறிப்பிட்டுக் காட்டுவதாக எஸ்பிஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

 

***

ANU/SM/IR/RR/KRS



(Release ID: 1994261) Visitor Counter : 108


Read this release in: English