குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஹமீர்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) குடியரசுத் துணைத்தலைவர் ஆற்றிய உரையின் சில முக்கியப் பகுதிகள்

Posted On: 06 JAN 2024 7:05PM by PIB Chennai

எனக்கு வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

 

எனதருமை மாணவர்களே,

இங்கு மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் நம்முடன் உள்ளார். விளையாட்டுத் துறையில் அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

பொதுவாக வானமே எல்லை என்று நாம் சொல்வோம். ஆனால் வானம் ஒரு எல்லை அல்ல என்பதை உணர்த்தும் வகையில் பிரதமர் செயல்பட்டுள்ளார். இப்போது, நாம் வானத்தைத் தாண்டிச் சென்றுள்ளோம், இன்று ஒரு சிறந்த நாள். நமது ஆதித்யா எல் 1 சூரியனை ஆராயும் மிக முக்கியமான எல் 1 பகுதியில் நுழைந்துள்ளது.

'கடின உழைப்புக்கு மாற்றாக எதுவும் இல்லை' என்ற இந்த நிறுவனத்தின் தாரக மந்திரத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். 

2047ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது கனவை நாம் நனவாக்க வேண்டும்.  கல்வி என்பது முக்கியமானது. மாற்றத்தை ஏற்படுத்துவதில் கல்வி என்பது மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். வேறு எந்த அம்சமும் கொண்டுவராத சமத்துவத்தைக் கல்வி கொண்டுவருகிறது.  கல்வி, ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறது. அதைப் பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலி.  அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

 

என் இளம் நண்பர்களே,

நீங்கள் பாரதத்தின் சிற்பிகள். 2047 ஆம் ஆண்டில் இந்தியா என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்க என் வயதினர் இருக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் 2047-ம் ஆண்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மக்கள்தொகையால் ஏற்படும் நன்மை என்று வரும்போது, இந்தியா அதைக் கொண்டுள்ளது. நமது மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்கள்.

நாம் அமிர்த காலத்தில் இருக்கிறோம். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.  5000 ஆண்டுகள் பழமையான நாகரிகம் நம்மிடம் உள்ளது. அதை பின்பற்றி நாம் முன்னேற வேண்டும். உங்களுக்கு அறிவின் மீது தணியாத தாகம் இருக்க வேண்டும்.  உங்கள் கற்றல் உங்கள் பட்டம் பெறுவதுடன் முடிந்துவிடக் கூடாது. உங்கள் கற்றல் தொடர வேண்டும்.

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டில் கற்பனைக்கு எட்டாத ஊழல்களைப் பற்றி நாம் கேள்விப்பட வேண்டியிருந்தது. அதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. 2012-13 ஆம் ஆண்டில், நமது பொருளாதாரம் "பலவீனமானது" என்று உலகில் முத்திரை குத்தப்பட்டது.  சவால்கள் நிறைந்த கடினமான சூழலைக் கடந்து இவ்வளவு தூரம் நாம் பயணித்துள்ளோம். நாம் தற்போது 5 வது பெரிய உலகளாவிய பொருளாதாரமாக இருக்கிறோம். அமெரிக்க டாலர்களில் ஐந்து டிரில்லியன் உலகளாவிய பொருளாதாரமாக மாறும் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

ஒரு காலத்தில் உலகில் இந்தியாவின் குரல் கேட்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டது. இன்று நமது குரல் வலுவாக உள்ளது.  காலங்காலமாக நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் யோகா என்ற சுகாதார செயல்முறையை இந்தியாவின் அழைப்பின் பேரில் உலகம் ஏற்றுள்ளது.  ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவமும் தனித்துவமானது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது ஒரு வரலாற்று நடவடிக்கை! மாற்றத்தைப் பாருங்கள்! ஜி20 அமைப்பின் மிக முக்கியமான கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. உலகப் பிரதிநிதிகள் அங்கே சென்றனர். ஜம்மு-காஷ்மீரில் இப்போது குறிப்பிடத்தக்க அளவிற்கு சுற்றுலா முன்னேறி உள்ளது!

 

மாணவர்களே,

பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் பணியாற்றும் உலகின் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கோடி முதலீடும், 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இயந்திர கற்றலில் கவனம் செலுத்துங்கள். அதுவும் மிகவும் முக்கியமானது!

நீங்கள் நமது நிறுவனங்களில் கவனம் செலுத்த வேண்டும்! நாம்  மற்றவர்களை விட அதிக ஆற்றலும், அறிவாற்றலும் கொண்டவர்கள்! அதைப் பயன்படுத்தி வளர்ந்த இந்தியாவை உருவாக்கப் பாடுபடுங்கள்.

----

ANU/AD/PLM/DL


(Release ID: 1993860) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Hindi