சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் மாணவ-மாணவிகள் நடத்தும் 25-வது ஆண்டு சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா
Posted On:
03 JAN 2024 3:19PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மாணவ-மாணவிகள், 25-வது ஆண்டு சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழாவை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே மாணவர்களால் நடத்தப்படும் மிகப்பெரிய வருடாந்திர தொழில்நுட்ப-பொழுதுபோக்குத் திருவிழா 2024 ஜனவரி 3 முதல் 7ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
காலப்போக்கில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைச் சித்தரிக்கும் வகையில், இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் 'காலச் சக்கரங்கள்' என்ற கருப்பொருளில் சாஸ்த்ரா கவனம் செலுத்தும். வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருவிழாவில், கால்நூற்றாண்டு காலப் புதுமை, அறிவு, உத்வேகம் ஆகியவற்றை வெளிக்கொணர இருப்பதால், பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் மறக்க முடியாததொரு அனுபவத்தை இங்கே எதிர்பார்க்கலாம்.
சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (3 ஜனவரி 2024) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "2047-ம் ஆண்டில் சூப்பர் பவர் பாரதத்தைக் காண புதுமைக் கண்டுபிடிப்புகள் முதன்மையானதாகும். இளம் கண்டுபிடிப்பாளர்கள் சந்தித்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், போட்டியிடவும் ஏதுவாக தனித்துவமிக்க தளத்தை இதுபோன்ற தொழில்நுட்ப விழாக்கள் வழங்குவதால், தங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து மிக விரிவான மதிப்பீட்டை அவர்களால் பெற முடியும்" எனக் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் மொத்தம் 110 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 2,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாஸ்த்ராவின் முதன்மையான விரிவுரைத் தொடரில், முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடி உள்பட 12 புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

###
(Release ID: 1992706)