சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்
எனது இளைய பாரதம் (மேரா யுவ பாரத்) முன்முயற்சியின் ஒரு பகுதியாக சென்னையில் இளைஞர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்
Posted On:
22 DEC 2023 3:26PM by PIB Chennai
நாட்டின் இளைஞர்கள் தேசத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் நாடு வளர்ந்த நாடாக மாற உதவ வேண்டும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார். எனது இளைய பாரதம் (மை பாரத்) முன்முயற்சியின் ஒரு பகுதியாக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இளைஞர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மை பாரத் இணையதள முன்முயற்சி இளைஞர்களிடையே நம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதாக அவர் தெரிவித்தார். எனது இளைய பாரதம் முன்முயற்சியின், முதன்மை நோக்கம் இளைஞர் மேம்பாடு என்று அமைச்சர் கூறினார். புதிய நடைமுறைகளின் கீழ், வளங்கள் மற்றும் வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைத்து அவர்கள் தேசத்தை கட்டமைப்பவர்களாக மாறி, அரசுக்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக செயல்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்த இந்த முன்முயற்சி முக்கியப் பங்காற்றும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மை பாரத் தளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டு காலகட்டத்தை அமிர்த காலமாக அரசு கொண்டாடுகிறது என்று கூறிய அவர், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறக்கூடிய பொற்காலத்தை நோக்கி நடைபோடுவதாக அவர் குறிபிட்டார். அரசின் சாதனைகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், இந்த நடவடிக்கைகள் சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதார வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சிறந்த போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி நாட்டில் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.
நல்ல திட்டங்களின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்ற முடியும் என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார். தற்போது இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது என்று அவர் கூறினார். இளைஞர்களின் கூட்டு முயற்சியால் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இளைஞர்களிடம் எப்போதும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேச விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையிலிருந்து தற்போதைய இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். தற்சார்பு இந்தியா என்பது சாதாரண முழக்கம் அல்ல என்றும், அது இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய செயல்பாடாகும் என்றும் அவர் கூறினார். அரசு அதிக கவனம் செலுத்தக்கூடிய வளர்ச்சி திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது என்றும், அரசின் கொள்கைகளால் அதிக மூலதன வருமானம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நாட்டின் மகிழ்ச்சிக் குறியீடு ஆகியவை பெரிய அளவில் மேம்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் தொடர்பான தகவல்களை சென்னை நகரம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின், தகவல், கல்வி தொடர்புக்கான (ஐ.இ.சி) வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், இந்த யாத்திரை ஏற்கனவே சுமார் 2.5 கோடி மக்களை சென்றடைந்துள்ளதாக கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் திட்டங்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்த தங்கள் அனுபவங்களை பயனாளிகள் பகிர்ந்து கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை மக்கள் பங்கேற்பு நிகழ்வாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். இது அடுத்து வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக அமைப்புகளை சென்றடையும் என்றும் இது உலகின் மிகப்பெரிய மிகப்பெரிய மக்கள் தொடர்புத் திட்டமாக அமையும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று கூறிய திரு அனுராக் தாக்கூர், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். இது அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுய வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக மாறியுள்ளது என்று அமைச்சர் கூறினார். அரசின் வெளிப்படையான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதை நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து பேசிய அமைச்சர், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 90 சதவீத பொம்மைகளை இறக்குமதி செய்து வந்ததாகக் கூறினார். ஆனால் மேக் இன் இந்தியா திட்டம் இத்துறையை ஊக்குவித்துள்ளதாகவும், தற்போது இந்தியாவிலேயே 80 சதவீதம் பொம்மைகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் அறிவார்ந்த குடிமகனாக மாற இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்றார். எதிர்கால சந்ததியினரும் நமது கலாசார பாரம்பரியத்தை வளர்க்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். வெறும் பட்டங்கள் மட்டுமே இளைஞர்கள் வேலை தேட உதவாது என்று கூறிய அவர், அறிவும் திறமையும் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் என்று அவர் எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வேலைவாய்ப்பு சூழலை மாற்றியமைத்து வருவதாக அவர் தெரிவித்தார். அனைத்தையும் கருத்தில் கொண்டு 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இதற்கு திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் இன்றியமையாதது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (உஜ்வாலா), முத்ரா திட்டம் போன்ற மத்திய அரசின் முக்கிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகளின் பலன்களை வழங்கினார்
***
AD/SMB/PLM/RS/KV
(Release ID: 1989651)
Visitor Counter : 193