சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

என்பிடெல்-சென்னை ஐஐடி விளையாட்டு அறிவியலில் தனிச்சிறப்புடைய இலவச பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இடுகை இடப்பட்ட நாள்: 20 DEC 2023 2:30PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்   (ஐஐடி மெட்ராஸ்)- என்பிடெல், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் துறையான விளையாட்டு அறிவியல் பாடத்தில் 7 புதிய ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பாடப்பிரிவுகளை ஆன்லைனில் கட்டணம் ஏதுமின்றி படிக்கலாம்.

கோட்பாடு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த விரிவான ஆன்லைன் படிப்புகள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தியா மற்றும் தெற்காசிய உடல் அமைப்பு மற்றும் கலாச்சார அம்சங்களுக்கு ஏற்ப இப்பாடப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த 7 பாடப்பிரிவுகளுக்கான முதல் பேட்ச் வகுப்புகள் 19 பிப்ரவரி 2024 அன்று தொடங்குவதுடன், விண்ணப்பிக்கவும் அன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க வேண்டிய என்பிடெல் இணையமுகவரி https://nptel.ac.in/courses.

இப்படிப்புகள் தொடர்பான அறிமுக வீடியோவை பின்வரும் இணைப்பில் காண்பதுடன் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்- https://drive.google.com/file/d/1eJ4nU3lDvJ5gs0NtCgFZ5M-wg_9pzOj5/view

தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) கடந்த 2003-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் மற்றும் 7 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (சென்னை, பம்பாய், தில்லி, கான்பூர், காரக்பூர், கவுகாத்தி, ரூர்க்கி) தொடங்கப்பட்டது.

இப்பாடத்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், "இந்த விரிவான படிப்புகள் இந்தியாவை மையமாகக் கொண்ட விளையாட்டுத் தேவைகளை நிறைவுசெய்வதுடன், சிறந்த அனுபவத்தை அளிக்கக்கூடிய அணுகுமுறையை  ஊக்குவிக்கும். இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் போட்டி விளையாட்டுகளுடன் விளையாட்டுக் களங்களில் நுணுக்கங்களை அறிந்திருப்போருக்கான தேவை அதிகளவில் இருந்துவருகிறது. செயல்திறனை மேம்படுத்துதல், உணவு மற்றும் பயிற்சி அதிர்வெண்கள் போன்றவற்றைக் கண்காணித்தல், மீட்புத் திட்டங்களை உருவாக்குதல், விளையாட்டு அறிவியலுக்கான முழுமையாக அணுகுமுறையை வழங்குதல் போன்றவற்றை கற்பவர்கள் அறிந்துகொள்ள என்பிடெல் பாடத்திட்டங்கள் தயார்படுத்தும்" எனக் குறிப்பிட்டார்.

பரிந்துரைக்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு, வளர்ந்து வரும் இத்துறையை மேலும் அறிந்துகொள்ள என்பிடெல் அறிமுகப் பாடத்தைக் கற்கலாம். விளையாட்டு அறிவியல், பிசியோதெரபி, உடற்கல்வி உள்ளிட்ட இதர தொடர்புடைய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இப்பாடத்திட்டங்கள் பொருத்தமானவையாகும். இப்படிப்பு முடிந்த பின்னர், இதே துறையில் டிப்ளமோ அல்லது முதுகலை பட்டப்படிப்பை மாணவர்கள் தொடரலாம். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்விற்கான உயர்சிறப்பு மையம் இந்த களத்திற்கான பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய தேசிய திறந்தவெளி பாடப்பிரிவுகளுக்கான (MOOCs) இணைய முகவரியான ஸ்வயம் (swayam.gov.in) இணையத்திலும் இந்தப் பாடங்கள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் பதிவு இலவசம். இறுதித் தேர்வை மையத்தில் நேரடியாக எழுத வேண்டியிருக்கும். மிகக்குறைந்த தேர்வுக் கட்டணம் அதாவது ஒரு பாடப்பிரிவுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

***

PKV/KV

  


(வெளியீட்டு அடையாள எண்: 1988604) வருகையாளர் எண்ணிக்கை : 96
இந்த வெளியீட்டை படிக்க: English