சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் ட்ரோன்கள் புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது


வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை, வேளாண் தொழில்நுட்பத்தின் புதிய அம்சங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது

Posted On: 18 DEC 2023 3:34PM by PIB Chennai

அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டின் எந்த கிராமத்திலும் ட்ரோன் ஓசை கேட்பதை தவிர்க்க முடியவில்லை.  திருமணம் அல்லது திரைப்படப் படப்பிடிப்பு என்றில்லாமல், விவசாயிகள் தங்கள் வயல்களில் நானோ திரவ யூரியா மற்றும் உரங்களைத் தெளிக்கும் புதிய ட்ரோன் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஒரு பகுதியாக சென்னை உரத்தொழிற்சாலை நிறுவனம் (எம் எஃப் எல்) இதுபோன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தி வருகிறது.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களைத் தெளிக்கும் பாரம்பரிய முறையுடன் ஒப்பிடும்போது, நேரம், செலவு, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வேளாண் ட்ரோன்களின் பயன்பாடு ஒரு முன்னுதாரண மாற்றத்தை வழங்குகிறது. வேளாண் பணிகளில் வழக்கமான  முறையில் உரங்களைத் தெளிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் நிலையில்  தற்போது ட்ரோன்கள் மூலம் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் அது நடைபெறுவதாக சென்னை உரத்தொழிற்சாலை நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் திரு கே.சுரேஷ்குமார், விளக்குகிறார். மேலும், ட்ரோனுக்கு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது, இது வழக்கமான முறையில் தேவைப்படும் 100 லிட்டருக்கு முற்றிலும் மாறுபட்டது. பயிர்களில் நேரடியாக இடுவதால் பயிரின் மகசூல் அதிகரிப்பதோடு, மண் வளம் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது என்று திரு சுரேஷ் சுட்டிக்காட்டினார். இந்தத் தொழில்நுட்பம் நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்துவது  மட்டுமல்லாமல், ஆபத்தான ரசாயனப் பணிகளில்  மனிதர்கள் ஈடுபடுவதைக் குறைக்கிறது.

நமது லட்சியம், வளர்ச்சி்யடைந்த பாரதம் யாத்திரையின் ஒரு பகுதியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை பார்வையிட்ட திரு சுரேஷ்,  வேளாண் பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை விளக்கினார். நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்வதால், விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஓலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி, திரவ யூரியா, உரங்களைத்  தெளிக்கும் ட்ரோன் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்று நம்புகிறார். திருவள்ளூர் மாவட்டம், ஆதிகாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி பூங்கொடியும் இந்த புதிய தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து உற்சாகமாக உள்ளார். விவசாயத்தில் 40 ஆண்டுகால  அனுபவம் வாய்ந்த அவர், இத்தொழிலில்,  தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும், ஊதியம் அதிகமாக  இருக்கும் காலங்களில், ட்ரோன்கள் ஒரு மாற்றுக் காரணியாக இருக்கும் என்று நம்புகிறார்.

வேளாண் ட்ரோன்களை ஊக்குவிக்க, மத்திய அரசு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. விவசாயிகள் கூட்டுறவு சங்கம், வேளாண்  உற்பத்தியாளர் அமைப்புகள் கிராமப்புற தொழில்முனைவோர் 40 சதவீத மானியத்துடன் ரூ.4 லட்சம் வரை. நிதியுதவி பெறமுடியும். வேளாண் பணிகளுக்கான வாடகை மையங்களை நிறுவும் வேளாண் பட்டதாரிகள் 50% மானியத்துடன் ஒரு ட்ரோனுக்கு 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெறலாம். தனிநபர், சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் / பழங்குடியின உறுப்பினர்கள், பெண்கள், வடகிழக்கு மாநில விவசாயிகளுக்கு 50% மானியத்துடன், ரூ.5 லட்சம் வரையும், மற்ற விவசாயிகளுக்கு 40% மானியத்துடன், ரூ.4 லட்சம் வரையும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளின்  வோளாண் பணிகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை அதிகரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2023, நவம்பர் 30 அன்று நமோ மகளிர் ட்ரோன் திட்டத்தை அறிவித்தார். 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்கி விவசாயிகளுக்கு வாடகை வடிவில்  சேவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தப்  பன்முகத் திட்டம் வேளாண் நடைமுறைகளை நவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அதிநவீன தொழில்நுட்பத்தை கிராமப்புறப் பெண்களுக்கு அளிக்கிறது. வேளாண் புரட்சியில் அவர்களை முக்கிய பங்கேற்பாளர்களாகவும் உறுதிப்படுத்துகிறது. மேலும், ட்ரோன் ஏரோநாட்டிக்ஸ் பயன்படுத்தப்படாத திறனை ஆராய புத்தொழில் நிறுவனங்களுக்கு இது வழிகளை உருவாக்குகிறது.

தமிழ்நாட்டின்  ஊரகப்பகுதிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஒரு பகுதியாக ட்ரோன்கள் செயல்முறை உள்ளது.  இந்த இயக்கத்தின் போது  பொதுமக்கள் பல்வேறு மத்திய அரசின் சேவைகளையும் பெறுகின்றனர். பிரதமரின்  இலவச சமையல் எரிவாயு திட்டத்திற்கான பதிவு, எரிவாயு முகமைகளால் எளிதாக்கப்படுகிறது. தேவைப்படும் பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குகிறது. மேலும், இந்திய அஞ்சல் துறை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் வழங்கப்படும் ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல், பல்வேறு கணக்குகளைத் தொடங்குவது உள்ளிட்ட பிற சேவைகளுக்கான மையமாக இந்தப் பிரச்சாரம் செயல்படுகிறது.

*** 

   

 


(Release ID: 1987701) Visitor Counter : 185


Read this release in: English