சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

200 மீ சாம்பியன் ராஜேஷுக்கு ஒரு காலை இழந்தது தடையாக இல்லை

Posted On: 12 DEC 2023 6:04PM by PIB Chennai

டி64 பிரிவின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டி புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியபோது, ங்கிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாம்பரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது, ஏனெனில் இந்த கல்லூரியின் பிளேடு ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான
கே ராஜேஷ், முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்.

ராஜேஷின் கதை அபரிமிதமான துணிச்சலை கொண்டதாக இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ராஜேஷின் திறனை பார்க்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் விரும்பியது.

ராஜேஷ் தனது  திறமையினால் ஜே.எல்.என் மைதானத்தின் டிராக்கை ஒளிரச் செய்து 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நீளம் தாண்டுதலில் பங்கேற்ற ராஜேஷ், 5-ஆவது இடத்தைப் பிடித்தார். பிறந்த 6 மாதத்திலேயே காலை இழந்த ராஜேஷின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏமாற்றம், விரக்தி போன்ற வார்த்தைகளுக்கு இடமில்லை.

காந்திநகரில் (குஜராத்) உள்ள சாய் மையத்தில் நிதின் சவுத்ரியின் மேற்பார்வையில் பயிற்சி பெறும் ராஜேஷின் தனிப்பட்ட வாழ்க்கை எவரையும் பிரமிக்கவைக்கும். அவர் ஒருபோதும் தன்னை இரக்கத்திற்குரியவராக கருதவில்லை. ராஜேஷ் தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகிறார்.

இது குறித்து ராஜேஷ் கூறுகையில், "இந்தியாவின் தங்கப்பதக்கம் வென்ற பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு போன்ற பெயரைப் பெற விரும்புவதாகவும், டி64 நீளம் தாண்டுதல் பிரிவில் உலக சாதனை படைத்த ஜெர்மன் பாரா நீளம் தாண்டுதல் வீரர் மார்கஸ் ரெஹ்மைப் போல இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இயலாமை தனது வாழ்க்கைப் பாதையில் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என்றும், அது தம்மை ஒருபோதும் பாதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு சராசரி நபராகத்தான் தம்மை உணர்ந்ததாக கூறினார்.

பிறப்பால் ஊனமுற்றவரா என் கேள்விக்கு பதிலளித்த ராஜேஷ், தான் பிறப்பால் ஊனமுற்றவன் அல்ல என்றும், நான் சராசரியான குழந்தையாக பிறந்தேன் என்றும் தெரிவித்தார். ஆனால் தனது கால்களில் ஏற்பட்ட தொற்று காரணமாக, சிகிச்சை பெற வேண்டியிருந்தது என்றும், ஊசி மருந்து செலுத்தும் போது, காலில் ஊசி உடைந்து விஷம் பரவியதாகவும் கூறினார். இதையடுத்து பெற்றோரின் ஆலோசனைப்படி, அவருடைய உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் காலை துண்டித்ததாகவும் ராஜேஷ்  நினைவு கூர்ந்தார்.

10 மாத குழந்தையாக இருந்தபோது  வயதில், செயற்கை கால் கிடைத்ததாகவும், அதன் உதவியுடன் தனது எதிர்கால வாழ்க்கையை வாழத் தொடங்கியதாகவும் அவர் கூறினார். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் போது  அவரது பெற்றோர் அவரை விட்டு பிரிந்ததாகவும் ராஜேஷ் கூறினார்.

 தங்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை என்றும், அவரும் இரட்டை சகோதரரும் தாத்தா, பாட்டியுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக தெரிவித்தார். அவருடைய தாத்தா ஆட்டோ ஓட்டி அவர்களை வளர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கை கால்கள் மூலம் ஓடுவது குறித்து குறிப்பிட்ட 24 வயதான ராஜேஷ், தாம் கடந்த 5, 6 ஆண்டுகளாக பிளேடு ஓட்டம் செய்து வருவதாக கூறினார். 2018 ஆம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்கி அவர், 2016-ம் ஆண்டில், மாரியப்பன் தங்கவேலு ரியோ பாராலிம்பிக்கில் டி 42 பிரிவு உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதை தொலைக்காட்சியில் பார்த்து ஈர்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு தானும் ஒரு ஒலிம்பிக் வீரராக வேண்டும் என்று விரும்பியதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் முதல் சக்கர நாற்காலி வீரரான விஜய்யை நேரு மைதானத்தில் சந்தித்தபோது, பிளேடு ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளுமாறு அவர் தம்மை அறிவுறுத்தியதாக ராஜேஷ் கூறினார். 2018-ம் ஆண்டு பயிற்சியைத் தொடங்கி தாம், இரண்டு முறை தேசிய விளையாட்டுகளில் பங்கேற்றதாக தெரிவித்தார். 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்  புனேவில் நடந்த 21வது பாரா தேசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதாகவும், இதனால்  தமிழக அரசு  ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள புதிய பிளேடை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

 பாராலிம்பிக் மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டுக்காக பதக்கம் வெல்ல விரும்புவதாகவும், தற்போது ஜனவரி 9 முதல் 15 வரை கோவாவில் நடைபெற உள்ள பாரா தேசிய போட்டிக்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அங்கு குளிர் குறைவாக இருப்பதால் தனது திறன் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதன் பிறகு 2024 பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு தயாராக  உள்ளதாக ராஜேஷ் குறிப்பிட்டார்.

***

AD/IR/AG/KRS


(Release ID: 1985582) Visitor Counter : 79


Read this release in: English