குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

6-வது ஐ.சி.சி இந்திய நடுவர் தினத்தின் தொடக்க அமர்வில் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஆற்றிய உரை

Posted On: 02 DEC 2023 1:59PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

ஐ.சி.சி சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் (International Chamber of Commerce - Court of Arbitration) தலைவர், செல்வி கிளாடியா சாலமன், பல ஆண்டுகளாக நடுவர் மன்றத்தில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகிறார்.

அலெக்சாண்டர் ஜி.ஃபெசாஸ் ஐ.சி.சி சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

திருமதி பிங்கி ஆனந்த் போன்ற மிகவும் புகழ்பெற்ற நிபுணர்களும் இதில் உள்ளனர். இந்த அமைப்புக்கு அவர் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார்.

நான் சர்வதேச நடுவர் நீதிமன்றம், ஐ.சி.சி நடுவர் ஆணையம் ஆகியவற்றுடன் தொடர்புடைய நபர். 6 வது வருடாந்திர ஐ.சி.சி இந்திய நடுவர் தினத்தின் இந்த தொடக்க அமர்வு மிகவும் சரியான நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்தியா இப்போது அமிர்த காலத்தில் இருக்கிறது. மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழும் இந்தியா, அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பிரான்சின் பொருளாதாரங்களை பின்னுக்குத் தள்ளி, 5-வது பெரிய உலகளாவிய பொருளாதாரமாக இந்தியா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானின் பொருளாதாரங்களை பின்னுக்குத் தள்ளி 3 வது பெரிய உலகப் பொருளாதாரமாக இந்தியா மாறும்.

ஐ.சி.சி இந்திய நீதித்துறைப் பிரிவின் நூற்றாண்டு கொண்டாட்டம் மிகவும் பெருமைக்குரிய தருணம். ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் நான் இருந்த நாட்களை நினைவு கூர்கிறேன். ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் கற்றுக் கொண்டிருந்தேன். இந்தத் துறையில் புகழ்பெற்ற நிபுணர்களுடன் தொடர்புகொள்வது எப்போதும் ஒரு வளமான அனுபவமாக இருந்தது. இது நீங்கள் பார்க்கும் சாதாரண மத்தியஸ்த செயல்முறைக்கு அப்பாற்பட்ட ஒரு தளமாகும்.

இந்த நிகழ்வு இந்தியாவில் நடுவர் மன்றத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும், இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. உலக நிறுவனங்கள் நம்மை வாய்ப்பு மற்றும் முதலீட்டின் விருப்பமான இடமாகக் கொண்டுள்ளன.

இவற்றுக்கிடையே சில சச்சரவுகள் வணிகத் தகராறுகள் போன்றவை வணிக நடவடிக்கைகளில் இயல்பாகத் தோன்றும்.  எனவே வலுவான, வேகமான, அறிவியல் ரீதியான, பயனுள்ள மற்றும் சிறந்த மனித வளத்துடன் கூடிய ஒரு அமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது.

 

நண்பர்களே,

நிறுவன மத்தியஸ்தம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. நான் நீதிமன்றத்தில் இருந்த போது அதை வெளிப்படுத்தியிருக்கிறேன். இது உலகின் புத்திசாலித்தனமான வழிமுறைகள் மற்றும் சிறந்த செயல்முறையை வழங்குகிறது. ஐ.சி.சி., சர்வதேச நடுவர் நீதிமன்றம் இப்போது என்ன செய்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கு இருந்தபோது, அவர்கள், வணிகத் தகராறுகளின் சுமூகமான தீர்வுக்கான ஒரு தனித்துவமான செயல்முறையைக் கொண்டிருந்தனர். நாம் இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

பெரும்பாலான ஒப்பந்த நிபந்தனைகள் நடுவர் தீர்ப்பு இறுதியானது என்று கூறுகின்றன. ஆனால் சில வகைகளில், நீதித்துறையை அணுகுவது ஒரு அடிப்படை உரிமையாகும். எனவே நடுவர் செயல்முறை அல்லது மத்தியஸ்தத்தின் இறுதி முடிவு தொடர்பாக நீதித்துறையை அணுகுவது தவிர்க்க முடியாதது.

நான் ஒரு கட்டத்தில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் மற்றும் அதன் ஆணையத்துடன் தொடர்புடைய நபர் என்ற நிலையிலும் தற்போது, நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையிலும் நான் வகிக்கும் பதவியையும் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் மேலும் பேச விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுக்கு ஒரு யோசனையைக் கூறுகிறேன். உங்கள் கூட்டம் மற்றும் செயல்பாடுகள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் கூட்டங்கள் மேலோட்டமாக இருக்கக்கூடாது. நீங்கள் ஆழமாக ஆராய வேண்டும். கூர்மையான பகுப்பாய்வு இருக்க வேண்டும்.

நன்றி!

*******

ANU/AD/PLM/DL


(Release ID: 1981877) Visitor Counter : 99


Read this release in: English , Hindi