தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'ஃபேமிலி ஆல்பம்' திரைப்படத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட அனுபவங்கள் உத்வேகம் அளித்தன - பெற்றோர்களும் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள படம் உதவும்: உருகுவே திரைப்பட இயக்குனர் கில்லெர்மோ ரோகாமோரா
கோவாவில் நடைபெற்று வரும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களுடனான கலந்துரையாடல் இன்று (25-11-2023) நடைபெற்றது. இதில் உலக சினிமா (சினிமா ஆஃப் தி வேர்ல்ட்) பிரிவின் கீழ் திரையிடப்பட்ட 'ஃபேமிலி ஆல்பம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் கில்லெர்மோ ரோகாமோரா தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். தமது தனிப்பட்ட அனுபவங்கள் படத்தை வடிவமைப்பதில் எவ்வாறு உத்வேகம் அளித்தன என்பது குறித்து உருகுவே இயக்குனர் கூறுகையில், இது தமது குடும்ப அனுபவத்தைப் பற்றியது என்றும் தமது பெற்றோர் விவாகரத்து பெற்றபோது தமக்கு 16 வயது என்றும் கூறினார்.
ஸ்பானிஷ் மொழிப்படமான இப்படம், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மற்றும் தந்தை மகன் உறவை மையமாகக் கொண்டதாகும் என அவர் தெரிவித்தார். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் இந்த படம் பயனளிக்கும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
வாழ்க்கையில் இசையின் தாக்கம் குறித்தும், படத்தில் அது ஒரு முக்கிய அம்சமாக இருப்பது குறித்தும் இயக்குநர் எடுத்துரைத்தார்.
இந்தப் படம் குடும்பச் சிக்கல்களை ஆராய்வதுடன் அன்பு, நீடித்த பிணைப்பு ஆகிய கருப்பொருள்களுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இயக்குனர் பற்றி:
கில்லெர்மோ ரோகாமோரா ஒரு திரைப்பட மற்றும் விளம்பர தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவரது குறும்படமான பியூன் வியாஜே (2008) கேன்ஸ் எஃப்.எஃப் இல் போட்டியிட்டது. அவரது முதல் படமான சோலோ (2013) மியாமியில் திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட விருதை வென்றது. டிஸ்கவரி சேனலுக்காக லா எசென்சியா டி கரோலினா ஹெரேரா டி பேஜ் (2013) என்ற ஆவணப்படத்தை இவர் எழுதி இயக்கியுள்ளார்.
*****
ANU/PKV/PLM/DL
(Release ID: 1979827)
Visitor Counter : 122