சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தரநிலை பற்றிய விவாதம் (மானக் மந்தன் ) - நவம்பர் 2023
IS 17913:2022 யோகா மையம் - சேவை தேவைகள்
Posted On:
24 NOV 2023 6:36PM by PIB Chennai
இந்திய தரநிர்ணய அமைவனம் 24 நவம்பர் 2023 அன்று காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், தரநிலை மேம்பாட்டுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய தரநிலை IS 17913:2022 “யோகா மையம் - சேவை தேவைகள்“ பற்றிய விவாதத்தை நடத்தியது. இந்த கலந்துரையாடலில் 40 யோகா வல்லுநர்கள், திண்டுக்கல் மாவட்ட யோகா சங்க உறுப்பினர்கள், யோகா மைய இயக்குநர்கள், காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை சார்ந்த யோகா துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பிரம்மா குமாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
யோகா என்பது இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் வேர்களைக் கொண்ட முழுமையான வாழ்க்கை முறை. யோகா ஒரு ஆன்மீக பாரம்பரியம் என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் மனிதகுலத்தின் மாறிவரும் சுகாதார தேவைகளையும் ஆரோக்கியத்தையும் பூர்த்தி செய்ய யோகாவின் நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. யோகா சமீப ஆண்டுகளில் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்கள் மற்றும் கோளாறுகளை நிர்வகிப்பதற்கும் யோகப் பயிற்சிகள் பற்றிய விழிப்புணர்வு பல்வேறு தரப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
பல யோகா வல்லுநர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மன அழுத்தம், மனோதத்துவ மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் யோகா வாழ்க்கை முறையை பரிந்துரைக்கின்றனர். நாட்டில் பல யோகா மையங்கள் அவற்றின் சொந்த பாணிகள் மற்றும் வடிவங்களில் செயல்படுகின்றன. மக்களிடையே யோகா கற்றல் பிரபலமடைந்து வருவதால், யோகா மையங்களுக்கான இந்திய தரநிலையானது வழங்கப்படும் சேவைகளுக்கான அளவுகோலாக அமைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. யோகா மையங்களில் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தேவைகளை இந்த தரநிலையை எடுத்துரைக்கிறது.
திரு சு. த. தயானந்த், மூத்த இயக்குனர் & தலைவர் இந்திய தரநிர்ணய அமைவனம், மதுரை வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) மற்றும் இந்திய தரநிலைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அவர் தெரிவித்தார். மேலும் அவர் பங்கேற்பாளர்களை இந்திய தரநிலை IS 17913:2022 குறித்து கருத்து தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
டாக்டர். எல். ராதாகிருஷ்ணன், பதிவாளர், காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தலைமை உரையாற்றினார். நல்வாழ்வு மற்றும் சமூக ஆரோக்கியத்தின் பின்னணியில் தரநிலைகளின் பரந்த தாக்கங்களை அவர் எடுத்துரைத்தார்.
காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சமூக அறிவியல் துறையின் டீன் இன்சார்ஜ் டாக்டர் ஆர். மணி, காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர் டாக்டர் சி.சுகுமார் மற்றும் காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் டி ரவிச்சந்திரன் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர்.
IS 17913:2022 இன் முக்கிய அம்சங்கள் பற்றிய ஆழமான விளக்கக்காட்சியை திருமதி. ஹேமலதா பி பணிக்கர், இணை இயக்குனர், பிஐஎஸ், மதுரை, மற்றும் திரு டி. சந்தோஷ், பிஐஎஸ், துணை இயக்குனர், புது தில்லி வழங்கினர்.
விளக்கக்காட்சியின் பின்னர் விரிவான திறந்தவெளி விவாதம் நடத்தப்பட்டது மற்றும் தரநிலைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் இந்திய தரநிலை தொடர்பான தொழில்நுட்ப கேள்விகள் மற்றும் கருத்துகளை அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
திரு எஸ். கே. கனோஜியா, பிஐஎஸ் சேவைத் துறையின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். மேலும் அவர் போதுமான கோரிக்கைகள் உருவாக்கப்பட்டால், யோகா மையங்களுக்கு சான்றளிப்பது குறித்து பிஐஎஸ் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார். இருப்பினும், இந்த தரநிலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைப் பின்பற்றுமாறு யோகா மையங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
திருமதி. ஹேமலதா பி பணிக்கர், இணை இயக்குநர், பிஐஎஸ், மதுரை பங்கேற்றவர்களுக்கு நன்றியுரை வழங்கினார்.
***
PLM/KRS
(Release ID: 1979570)
Visitor Counter : 109