சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பொதுத்தேர்தல் குறித்து அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் செய்தியாளர்களுக்கான பயிற்சி பட்டறை
Posted On:
22 NOV 2023 6:08PM by PIB Chennai
2024 பொதுத்தேர்தல் குறித்து அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் செய்தியாளர்களுக்கான பயிற்சி பட்டறை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்ய பிரதா சாகு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி பேசியதாவது:
ஜனநாயகத்தின் 3 தூண்கள் சிறப்பாக செயல்பட்டு நிலையான ஜனநாயகத்திற்கு ஊடகம் துணை புரிகிறது. மக்களின் கருத்துகள் தேர்தலில் ஓட்டு மூலம் பிரதிபலிக்கிறது.
ஆசிய கண்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா எப்படி முன்னேற முடியும் என்று பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பினர். இருப்பினும் அனைத்து தளத்திலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்கள் சிறந்த ஆளுமைகளை உருவாக்கி வருகிறது. உலகின் பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்களே தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.
முன்பு தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் ஆகியவற்றில் என்ன தரப்பட்டதோ அதையே மக்கள் படித்தனர். தற்போது சமூக ஊடகங்களின் உதவியால், மக்கள் தங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து படிக்கின்றனர்.
உலகில் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தொழில்நுட்ப வசதி இல்லாததால் பல அரிய பொக்கிசங்களை நாம் இழக்க வேண்டியிருந்தது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நடக்கும் நிகழ்வை வருங்காலத் தலைமுறையினர் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதன் வெளிப்படை தன்மையை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்து வருகிறது.
ஊடகவியலாளர்கள் ஒரு நிகழ்வை பல்வேறு கண்ணோட்டங்களில் அணுகி மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செய்திகளைத் தர வேண்டும். தற்போது வாக்காளர் சேர்க்கை, நீக்கம் நடைபெற்று வருகிறது. இதில் 100 சதவீதத்தை எட்ட, நீங்கள் உதவ வேண்டும்.
நாட்டின் மொத்த வாக்காளர்களில் 33 சதவீதம் பேர் முதல் முறை வாக்களிப்பவர்கள். எனவே 18 வயது நிரம்பிய மாணவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஊடகவியலாளர்கள் ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் நடைபெறுகிறது. இதைப் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
வீடுகளுக்கே வாக்காளர் அடையாள அட்டை அனுப்புதல், வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகளை செய்து தருதல் என 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய வானொலி துணை தலைமை இயக்குனர் திரு. பாண்டி, பொதிகை தொலைக்காட்சி செய்தி பிரிவு இயக்குநர் திரு. குருபாபு பலராமன், அகில இந்திய வானொலி நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் திருமதி. ஜெயா மகாதேவன், அகில இந்திய வானொலி செய்தி பிரிவு இணை இயக்குநர் திருமதி. லீலா மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-----
TV/ SMB/ KPG
(Release ID: 1978860)
Visitor Counter : 442