சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் “பூமிராசி தளம்” செயல்படும் முறை குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னையில் “பயிலரங்கம்” நடத்தியது

Posted On: 20 NOV 2023 9:16PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையுடன் இணைந்து சென்னையில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும்பூமிராசி தளம் முகப்புசெயல்படும் முறையினை விளக்கும் வகையில் நவம்பர் 20 அன்றுபயிலரங்கம்நடத்தியது. தேசிய நெடுஞ்சாலைகளின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவைப்படும் "நிலம் கையகப்படுத்துதல்" தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வழி முறைகளை விளக்குவது இப்பயிலரங்கின் நோக்கமாகும்.

தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத் திட்டங்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவும் இந்த முனைப்பு நடவடிக்கை வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் சாலைக் கட்டுமானங்களை விரிவாக்கம் செய்யவும் பல்வேறு திட்டங்களை குறித்த காலக்கெடுவிற்குள் நிறைவேற்றவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ.40,000 கோடி செலவில் 1500 கி.மீ நீளத்திற்கு நெடுஞ்சாலை வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மாநில அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் திரு. பிரதீப் யாதவ் பயிலரங்கைக் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுதொகையை பட்டுவாடா செய்வது நில எடுப்பு தனி மாவட்ட அலுவலர்களின் முதன்மையான கடமை ஆகும் எனவும் இழப்பீட்டினை பட்டுவாடா செய்யாமல் நிலத்தை கையகப்படுத்துவது அறநெறிக்கு முரண்பட்டது எனவும் கூறினார். பங்கேற்ற அனைவரும் இப்பயிலரங்கை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெற கேட்டுக்கொண்டார். நிலம் கையகப்படுத்துதல் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்து நில உரிமையாளர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீட்டுத் தொகையை பட்டுவாடா செய்வதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்.

தென் மாநிலங்களின் ஆலோசகர் செல்வி. லீனா நாயர் (ஓய்வு) இப்பயிலரங்க அமர்வுகளைத் துவக்கி வைத்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் நிலம் கையகப்படுத்தும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களும் (நிலம் கையகப்படுத்துதல்), திட்ட இயக்குநர்களும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் சேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறியாளர்களும் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் துணை செயலர் திரு. அபய் ஜெயின், மத்திய அரசின் ஆலோசகர் திரு.பி.பி.கரே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணைப் பொது மேலாளர் திரு விமல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மண்டல அலுவலர் திரு.எஸ்.விஜயகுமார், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலர் திரு.வீரேந்தர் சாம்பியால், மதுரை மண்டல அலுவலர் திரு. அஜய் பிஷ்னோய் ஆகியோர் கலந்துகொண்டு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டப் பூர்வமான நடைமுறைகள் மற்றும் "பூமிராசி தளத்தின்" நெறிமுறைகளை விரிவாக விளக்கினர். புத்தாக்கம் செய்யப்பட்ட "பூமிராசி தளம்" நில உரிமையாளர்களுக்கு விரைவாக இழப்பீட்டுத்தொகையை நேரடியாக பட்டுவாடா செய்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், நில உரிமையாளர்களே தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு பட்டுவாடா எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது. தங்களது குறைகள் ஏதேனும் இருப்பின் அதன் தற்போதைய நிலையையும் தெரிந்து கொள்ளவும் இத்தளம் உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய சென்னை மண்டலத்தின் ஆலோசகர் மேலும் திரு. து.நா.ராமநாதன் அவர்கள் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தும் பணியில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்குரிய சுமூகமான தீர்வுகள் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.

நிலம் கையகப்படுத்தும்போது எதிர்கொள்ளும் எல்லா இடர்பாடுகளும் விரிவாக விவாதிக்கப்பட்டு தக்க வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் வழங்கப்பட்டன.

 

***

AD/ KRS

 

 

 

 


(Release ID: 1978387) Visitor Counter : 89


Read this release in: English