சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்டி-பிஎச்டி இரட்டைப் பட்டத்தை வழங்கவிருக்கிறது.
Posted On:
16 NOV 2023 2:47PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்டி-பிஎச்டி இரட்டைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை வழங்க உள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் முதுகலை மருத்துவப் பட்டமும், ஐஐடி மெட்ராஸ்-ன் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் பிஎச்டி பட்டமும் இதன்மூலம் வழங்கப்படும். ஒருங்கிணைந்த மருத்துவ- பல்துறை சார்ந்த மற்றும் பயனளிக்கக்கூடிய ஆராய்ச்சியில் இந்த கூட்டுமுயற்சி கவனம் செலுத்தும்.
இந்த இரட்டைப் பட்டப்படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (SRIHER) துணைவேந்தர் டாக்டர் உமா சேகர், ஐஐடி மெட்ராஸ்-ன் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோர் இன்று (16 நவம்பர் 2023) கையெழுத்திட்டனர். ஐஐடி மெட்ராஸ் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைத் தலைவர் பேராசிரியர் போபி ஜார்ஜ், ஐஐடி மெட்ராஸ் கல்விநிறுவனப் பேராசிரியரான பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் ஆசிரியர்கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
'மருத்துவர்-விஞ்ஞானிகளின்' அவசியம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி, "இந்த உலகிற்கு மருத்துவத் தொழில்நுட்பம் அவசியம். தொழில்நுட்ப உலகை ஆராய கணினித்துறையில் திறமை மிகுந்த மருத்துவர்கள் அதற்குத் தேவைப்படுகின்றனர். இத்தேவையை செயல்படுத்துவதன் தொடக்கமாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடையே எம்.டி-பிஎச்.டி பாடத்திட்டம் திட்டமிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நம் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில், அணுகக்கூடிய, குறைந்த செவிலான, தரமான சுகாதார சேவைக்கு வழிவகுப்பதுடன், இந்த கூட்டுமுயற்சி மிகவும் சுவாரஸ்யமான பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ் 2023 மே மாதம் தொடங்கிய மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, நான்காண்டு பி.எஸ். மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை வழங்குகிறது. இதுபோன்ற பாடத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாகும்.
'மருத்துவர்-விஞ்ஞானிகள்' என்று அழைக்கப்படும் எம்டி-பிஎச்டி பட்டதாரிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே. இருப்பினும், உடலியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க அளவாக 37 சதவீத அளவுக்கு இவர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. புகைபிடித்தலுக்கும் புற்றுநோய்க்கும், அதேபோன்று சர்க்கரைக்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்புகளை, அவற்றுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளோடு இவர்கள் நிரூபித்துள்னர்.
ஆபத்துமிகுந்த ஒவ்வொரு சாத்தியமான முன்னேற்றத்தை முன்வைக்கும் வடிவங்களைக் கவனிக்கவும், நிறுவப்பட்ட நம்பிக்கைகளில் உள்ள சவால்களை சந்திக்கவும் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஆய்வகம், மருத்துவமனை, சமூகம், மக்கள்தொகை ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் அவர்கள் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் அதிகமான அளவில் இத்தகைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர்.
நன்கு பயிற்சி பெற்ற ஆராய்ச்சி விஞ்ஞானிகளை உருவாக்கி மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் இந்தியாவை தன்னிறைவுக்கு முன்னெடுத்துச் செல்வது எம்டி-பிஎச்டி இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டத்தின் நோக்கமாகும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
********

(Release ID: 1977340)