சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “அறிவியல் ஆய்வு” நிகழ்ச்சி

Posted On: 31 OCT 2023 5:46PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து, சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக “அறிவியல் ஆய்வு” நிகழ்ச்சியை அக்டோபர் 31ம் தேதியன்று சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர்  வளாகத்தில் ஏற்பாடு செய்தது. பள்ளி மாணவர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும், சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆராய்ச்சி நடவடிக்கைகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வின் போது,  முதன்மை விஞ்ஞானி எஸ்.மகேஸ்வரன் தொடக்க உரையாற்றினார். முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஜெ. ராஜாசங்கர் வரவேற்று பேசினார். சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மற்றும் சிஎம்சியின் ஒருங்கிணைப்பு இயக்குனர் டாக்டர். என். ஆனந்தவல்லி தலைமை உரையாற்றினார். 

அவரது ஊக்கமளிக்கும் உரையில், இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர் தினம், இயற்கையால் ஈர்க்கப்பட்ட பொறியியல் வடிவமைப்புகள், உயிரியல்-ஈர்க்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டிடக் கட்டமைப்புகளின் பரிணாமம் குறித்து பேசினார். மாணவர்களை ஆக்கப்பூர்வமாகவும், புதுமையாகவும், பெரிய கனவுகளுடன், திட்டவட்டமான இலக்குகளை நிர்ணயம் செய்தல், திட்டவட்டமான திட்டங்களைத் தயாரித்தல், கடினமாக உழைத்து, விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவர்களை அவர் ஊக்குவித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டின் விளைவுகள், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசரத் தேவை, கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருத்தல் ஆகியவை குறித்தும் அவர் பேசினார்.

முறையான தொடக்க விழாவைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் பல்வேறு ஆய்வகங்களை பார்வையிட்டனர், மேலும் பல்வேறு ஆய்வகங்களின் விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு வெவ்வேறு சோதனைகளை செய்து காட்டினார். மாணவர்களுக்கு செயல்முறை (நாணய-பேட்டரி, சிறிய வடிவ கட்டிடங்கள் & சிறிய வடிவ பாலங்கள்) விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டன.  மாணவர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். அனைத்து நிகழ்வுகளிலும் சுறுசுறுப்பாக பங்கு பெற்றனர். பல கேள்விகளுடன் விஞ்ஞானிகளுடன் உரையாடினர்.

முதுநிலை முதன்மை விஞ்ஞானி டாக்டர் எஸ்.மகேஸ்வரன், விஞ்ஞானி திரு. இ. அசோக்குமார் ஆகியோர் முழு நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தனர்.

 

AD/BS/KRS


(Release ID: 1973495) Visitor Counter : 145


Read this release in: English