பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றினார்

Posted On: 18 OCT 2023 3:43PM by PIB Chennai

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது ராணுவத் தளபதிகள் மாநாடு, அக்டோபர் 16 அன்று  நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, தற்போதுள்ள பாதுகாப்பு சூழ்நிலை, எல்லைகள் மற்றும் உள்பகுதியில் உள்ள நிலைமை, தற்போதைய பாதுகாப்பு நடைமுறையின் சவால்கள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் ராணுவத் தளபதிகள் விரிவாக விவாதித்தனர். நிறுவன சீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம் மற்றும் மனித வள மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளையும் இந்த மாநாடு கவனத்தில் கொண்டது. மாநாட்டின் மூன்றாவது நாளின் சிறப்பம்சமாக   பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ராணுவத்தின் மூத்த  அதிகாரிகளிடையே உரையாற்றினார்.  நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் ராணுவம் ஆற்றிவரும் முக்கியப் பங்கினை தமது உரையில் அவர் எடுத்துரைத்தார். இந்த உயர்நிலை அதிகாரிகள் மாநாடு ஆயுதப்படைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய சிக்கலான மற்றும் தெளிவற்ற உலக நிலைமை குறித்து பேசிய அவர், வியூகங்களைத் திட்டமிடும்போதும் வகுக்கும்போதும் ஆயுதப்படைகள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். எதிர்பாராதவற்றை எதிர்பார்க்கவும், அதன்  அடிப்படையில் திட்டமிடவும், வியூகம் வகுக்கவும், அதற்கேற்ப தயாராகவும் இருக்க வேண்டும் என திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

வடக்கு எல்லைகளில், தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு துறை அமைச்சர், எந்தவொரு சூழ்நிலையிலும், ராணுவத்தின் மீதான முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தை அனைத்து  நிலைகளிலும் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். 

"ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வதில் சி.ஏ.பி.எஃப் / காவல் படைகள் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பை அவர் பாராட்டினார்.   இது தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.  முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட சிவில் தொழில்களுடன் இணைந்து, முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அதன் மூலம் 'உள்நாட்டுமயமாக்கல் என்பதில் இருந்து நவீனமயமாக்கல்' அல்லது 'தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கி முன்னேறவும் ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.  

ராணுவத்தைப் பற்றி  நாடு பெருமிதம் கொள்கிறது என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், சீர்திருத்தங்கள் மற்றும் திறன்களை நவீனமாக்கும் பாதையில் ராணுவத்தின் முன்னோக்கிய நகர்வுக்கு உதவி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

 

***

ANU/PKV/SMB/AG/KPG


(Release ID: 1968828) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi