சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிக்கான தேர்வு கால அட்டவணை

Posted On: 10 OCT 2023 11:11AM by PIB Chennai

மத்திய அரசின் தென் மண்டலப் பணியாளர் தேர்வாணையம்  சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை  பணிக்கு தேர்வு நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 52,659  விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம்,  தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல், கரீம்நகர் என மொத்தம் 16 இடங்களில் 23 மையங்களில் நடைபெற உள்ளது.

தென் மண்டலத்தில் இத்தேர்வு 12.10.2023, 13.10.2023 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். இந்நாட்களில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை என 3 ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்தும், பிறகு அவரவர் தேர்வு நாள் வரை மட்டும் பணியாளர் தேர்வாணைய வலைதளத்தில் இருந்து மின்னணு – தேர்வு அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், புளுடூத், ஹெட்போன், பேனா/ பட்டன் ஹோல்/ ஸ்பை கேமராக்கள்,  ஸ்கேனர், கால்குலேட்டர்  ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.  அதுபோன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள்  வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன், சட்ட/ குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்த 3 -7  ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் எதையும்  தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்னணு தேர்வுக் கூட அனுமதி சீட்டு மற்றும்  அசல் அடையாள ஆவணமின்றி, விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வுக் கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள்/ சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (லேண்ட்லைன்- 044 2825 1139 & செல்பேசி: 94451 95946) வாயிலாகத் தொடர்புகொள்ளலாம்.

+***************

SMB/PKV/AG


(Release ID: 1966184) Visitor Counter : 133


Read this release in: English