மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் 2023 செப்டம்பர் 4 ஆம் தேதி மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் மீன்வள கிசான் கடன் அட்டை தொடர்பான ஒருநாள் தேசிய மாநாடு நடைபெற உள்ளது
Posted On:
02 SEP 2023 1:45PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில், 2023 செப்டம்பர் 4ஆம் தேதி மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் மீன்வள கிசான் கடன் அட்டை (கே.சி.சி) குறித்த ஒருநாள் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. மீன்வளத் துறையும், கால்நடை பால்வளத் துறையும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷண் ராவ் கரத், மகாராஷ்டிரா அரசின் மீன்வளத்துறை அமைச்சர் திரு சுதிர் முங்கந்திவார், மகாராஷ்டிரா அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை திரு ராதாகிருஷ்ணா ஏக்நாத்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி, நிதி சேவைகள் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகளும் இதில் பங்கேற்பார்கள். தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் பிற தொடர்புடைய துறைகள் மற்றும் அமைச்சகங்களின் பிரதிநிதிகள், கே.சி.சி பயனாளிகள், மீனவர்கள், மீன் பண்ணையாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்வார்கள். நேரடியாகவும் காணொலி மூலமாகவும் என இரண்டு விதமாகவும் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 500 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் போது, தகுதிவாய்ந்த மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகளை (கே.சி.சி) அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா வழங்குவார். அவர்களுடன் கலந்துரையாடுவதுடன் மாநாட்டிலும் அவர் உரையாற்றுவார்.
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடவடிக்கைகள், உணவு, ஊட்டச்சத்து மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய ஆதாரமாகவும், 2.8 கோடி மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இத்துறை சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.
கிசான் கடன் அட்டைத் திட்டம் 2018-19 ஆம் ஆண்டில் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு அவர்களின் செயல்பாட்டு மூலதன தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் மத்திய அரசால் விரிவுபடுத்தப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி 4 பிப்ரவரி 2019 அன்று மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களுக்கு கே.சி.சி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள விவசாயிகளுக்கு கே.சி.சி மூலம் கடன் வழங்கும் செயல்முறையை முறைப்படுத்த, கால்நடை மற்றும் மீன்வள அமைச்சகம், ரிசர்வ் வங்கி, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் இந்தியன் வங்கி சங்கம் (ஐ.பி.ஏ) உள்ளிட்ட தரப்பினர் கலந்தாலோசித்து நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டன.
கே.சி.சி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் முயற்சிகளின் மூலம், நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு இதுவரை 1.49 லட்சம் கே.சி.சி வழங்கப்பட்டுள்ளது.
***
SM/ANU/PLM/DL
(Release ID: 1954373)
Visitor Counter : 536