சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நாட்டின் நேரடி வரிவசூல்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் நான்காம் இடம்

Posted On: 19 JUL 2023 11:25AM by PIB Chennai

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம், 2022-23 நிதியாண்டின் மொத்த வரி வசூல்  ரூ.1,24,414 கோடி அதில்  நிகர வரி வசூல் ரூ.1,08,364 கோடி. தேசிய அளவில் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் நான்காம்  இடத்தில் உள்ளது.  நிகர வரி வசூலான ரூ.1,08,364 கோடியில், ரூ.60,464 கோடி TDS/TCS மூலமாக வசூலானது. இது நிகர வரி வசூலில் 56 சதவிகித பங்கு ஆகும். TDS வசூலைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 50% வசூல் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் TDS, அதைத் தொடர்ந்து தொழில்முறை/தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் ஒப்பந்த கட்டணங்களுக்கான TDS ஆகும்.  2023-24 நிதியாண்டிற்கு, இம்மண்டலத்திற்கான வரி வசூல் இலக்கு ரூ.1,17,900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.  இவ்விலக்கில் TDS/TCSக்கான இலக்கு ரூ.59,851 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

பல புதிய பரிவர்த்தனைகள், அதாவது பணம் திரும்பப் பெறுதல், வெளிநாட்டிற்குப் பணம் அனுப்புதல், சொகுசு கார்கள் வாங்குதல், ஆன்லைன் விளையாட்டு போன்றவையும் TDS/TCS வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலமானது, TDS/TCS தொடர்பாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் மற்றும் நடைமுறைகளை, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு விளக்கும் விதமாக பலதரப்பட்ட சேவைகளை வழங்க முயற்சிக்கிறது.  இந்த நோக்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள வரிப் பிடித்தம் செய்பவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, TDS தலைமை ஆணையரால் TDS பிடிப்பவர்களுக்கான பிரசுரங்கள் மற்றும் கையேடு 2023, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் TRACES போர்ட்டலில் வரிப் பிடித்தம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்கும் விதமாக தமிழ் மொழியில் 16 காணொளிகள் You tube சேனலில் (https:// youtube.com@incometaxtamilnaduandpuduc9090) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில், நாட்டிலேயே முதல் முறையாக வருமான வரித்துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக “TDS நண்பன்" என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான காலக்கெடு மற்றும் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற TDS தொடர்பான கேள்விகளுக்கு பிரத்தியேகமாக தகவல்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் Chatbot, சென்னை வருமான வரி முன்னாள் தலைமை ஆணையர் (TDS) திரு.எம் ரத்தினசாமி, இ.வ.ப. முன்னிலையில், சென்னை வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் திரு. சஞ்சய் குமார் வர்மா, இ.வ.ப. அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த Chatbot பயனர்களுக்கு ஏற்ற வகையிலும் சுலபமாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு இடையே இடைமுகமாக 24 X 7 செயல்படும் நோக்கம் கொண்டது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில், அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.  இச்செயலி TDS மற்றும் TCS சம்பந்தமான, பொது வெளியில் தேவைப்படும் தகவல்களை உள்ளடக்கி அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Chatbot செயலியை Play store / App Store-இலிருந்து Android மற்றும் iOSஇரண்டிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி இணையதளத்தில் (www.tnincometax.gov.in) கிடைக்கப்பெறும் URL இணைப்பு வாயிலாகவும் அணுகலாம்.

***



(Release ID: 1940634) Visitor Counter : 159


Read this release in: English