சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் நேரடி வரிகள் ஆலோசனைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது
Posted On:
14 JUL 2023 8:54PM by PIB Chennai
வருமான வரி - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின், மண்டல நேரடி வரிகள் ஆலோசனைக் குழுவின் (RDTAC) கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 14 ஜூலை 2023, அன்று நடைபெற்றது. அதில், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் எம்.தம்பிதுரை அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். திரு. சஞ்சய் குமார் வர்மா, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, மண்டலத்தின் மற்ற மூத்த வருமான வரி அதிகாரிகள் மற்றும் குழுவின் பிற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். RDTAC ஆனது நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசாங்கத்தின் நியமன உறுப்பினர், வணிகம், வர்த்தகம், தொழில்கள் மற்றும் கணக்குகள் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் உள்ளடக்கியதாகும்.
திரு. சஞ்சய் குமார் வர்மா, தனது வரவேற்புரையில், வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறைக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும், பொதுவான நிர்வாக மற்றும் நடைமுறை சிக்கல்களை நீக்குவதுமே, இக்குழுவின் நோக்கம் என்று விளக்கினார். வரி செலுத்துவோருக்கு தரமான சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு, கணினிமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவை பேருதவியாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை இடையிலான நேரடி தொடர்புகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.
டாக்டர் எம்.தம்பிதுரை தனது உரையில், குழுவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்தக் குழுவின் ஆலோசனைகளை நிதியமைச்சகத்துக்கு அனுப்பலாம் என்று கருத்து தெரிவித்தார். மேலும், இக்குழுவானது பல தரப்பட்ட பயனாளர்களிடம் (வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) இருந்து கூட்டங்களை கூட்டி கருத்துகளை சேகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். .
குழுவின் மற்ற உறுப்பினர்கள் தத்தம் துறைகளை மையப்படுத்தி நேரடி வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
திரு. சஞ்சய் குமார் வர்மா அவர்கள், உறுப்பினர்களின் மதிப்புமிக்க ஆலோசனைகள் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். வரி செலுத்துவோர் சேவைகளை திறம்பட செயல்படுத்துவதற்குரிய ஆலோசனைகளை பெற chennai.dcit.hq.coord@incometax.gov.in என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டார். பெறப்படும் கருத்துக்கள் குறித்து விவாதிக்க அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த செயல்முறையின் மூலம் வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
************
(Release ID: 1939626)
Visitor Counter : 121