சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்
Posted On:
14 JUL 2023 12:07PM by PIB Chennai
செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இன்று நடத்தியது. கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி (மிஷ்டி) என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். மாணவர்கள் உட்பட சுமார் 100 பேர் இதில் கலந்து கொண்டனர். சதுப்புநில காடுகளுக்கு சிறப்பு கவனம் அளித்து நடைபெற்று வரும் “பசுமைத் திருவிழாவின்” ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடலோர பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் சமூக மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சதுப்புநில காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் மக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். மாணவர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடையே சதுப்புநில காடுகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சதுப்பு நில தாவரங்களுக்கு உள்ளூர் மொழியில் பெயர் வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னையில் உள்ள எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொகுத்துள்ள “உயிரி பன்முகத்தன்மை மற்றும் சதுப்புநில சூழலியலின் முக்கியத்துவம்” (Biodiversity and Importance of Mangrove Ecosystem) என்ற புத்தகத்தையும் மத்திய அமைச்சர் திரு யாதவ் வெளியிட்டார்.
இந்தியாவிலும், இந்தோனேசியா உள்ளிட்ட இதர நாடுகளிலும் ஏற்கனவே இருந்து வரும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவின் கடலோர மாவட்டங்களில் சதுப்புநில காடுகளை மீண்டும் வளர்க்கும் நோக்கத்துடன் மிஷ்டி திட்டத்தை இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. கடலோர மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, சதுப்பு நில காடுகளுடன் தொடர்புடைய சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா முன்முயற்சிகளை உருவாக்குவது முதலியவையும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். சிஓபி27 மாநாட்டின் போது தீவிர உறுப்பினராக இந்தியா விளங்கிய காலகட்டத்தில், சதுப்புநில காடுகளை ஊக்குவிப்பதற்காக நாடுகளிடையே உருவாக்கப்பட்ட பருவநிலைக்கான சதுப்புநில காடுகள் கூட்டணி என்ற முன்முயற்சியில் மிஷ்டி திட்டம் பெரும் பங்கு வகிக்கும்.
தற்போது 5000 சதுர கிலோமீட்டர் தூரம் அளவுக்கு சதுப்புநில காடுகள் இருந்து வரும் நிலையில், மிஷ்டி திட்டத்தின் கீழ் 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் கூடுதலாக 540 சதுர கிலோமீட்டர் காடுகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023-2024 முதல் 2027-2028 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு இத்திட்டத்தை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஈடுசெய் காடு வளர்ப்பு மேலாண்மை, திட்டமிடல் ஆணைய (CAMPA) நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் இதர ஆதாரங்களின் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சதுப்பு நில காடுகளை வளர்ப்பதற்காக மொத்தம் 39 சதுர கிலோமீட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் திரு சந்திர பிரகாஷ் கோயல், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் திரு சுப்ராத் மொகாபாத்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்குப் பிறகு சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அமைச்சர் நேரில் சென்றார். அறக்கட்டளையின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதனுடன் அவர் கலந்துரையாடினார். நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் சதுப்புநில காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் இந்த அறக்கட்டளை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான மிஷ்டியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஐந்திணைகளை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.
***
LK/BR/AG
(Release ID: 1939435)
Visitor Counter : 161