சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன் அந்தமான் நிக்கோபாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று ஆய்வு செய்தார்: சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் நாளை பங்கேற்கிறார்

Posted On: 20 JUN 2023 7:38PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு  மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு எல் முருகன், இன்று (20-06-2023) அந்தமான் நிகோபாரின் போர்ட் பிளேர் சென்றார்.

போர்ட் பிளேரில் உள்ள கரச்சராமாவில் நடைபெற்று வரும் 155 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த மருத்துவமனையின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமான் தீவுப் பகுதி மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கில் கட்டப்படும் இந்த மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்தவும், பணிகளை விரைவாக நிறைவு செய்யவும் இணை அமைச்சர் திரு எல் முருகன் அறிவுறுத்தினார்.

தெற்கு அந்தமானின் கிராமப்புறங்களை போர்ட் பிளேருடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 4-ல் சிப்பிகாட் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆய்வு செய்தார்.

பின்னர் அந்தமான் சிப்பிகாட்டில் உள்ள வேளாண் துறையின் இயற்கை பண்ணையை அமைச்சர் பார்வையிட்டார். சிப்பிகாட்டில் உள்ளூர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடிய அவர், மசாலாப் பொருட்களின் சந்தை வளர்ச்சி மற்றும் இயற்கை வேளாண் பொருட்களின் சந்தை குறித்து கேட்டறிந்தார். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், தங்களது செயல்பாடுகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கினர்.  

பின்னர் டாக்டர் எல்.முருகன் வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.  போர்ட் பிளேர் சந்தைப் பகுதியில் உள்ளூர் மக்களை நேரடியாகச் சந்தித்து மத்திய அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், 9 ஆண்டு கால சாதனைகள் குறித்தும் அவர் விளக்கினார். அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அமைச்சர் பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

நாளை (21-06-2023) அந்தமான் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச யோகா தின விழாவில் மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் பங்கேற்கிறார். பின்னர் ஸ்வராஜ் த்வீப் பகுதியில் மீன் இறங்குதளத்திற்குச் செல்லவுள்ள அவர், அங்கு உள்ளூர் மீனவர்கள் மற்றும் அரசுத் திட்டங்களால் பயன் அடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.

***

SM/PLM/MA/KRS

 

 



(Release ID: 1933757) Visitor Counter : 94


Read this release in: English