சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், உதவும் நல்வாழ்வுத் தொழில் நுட்பங்களுக்கான தேசிய மையத்தை தொடங்கியுள்ளது
உதவும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை செயல்படுத்தும் மையமாக திகழ்வதுடன், பயன்பாட்டிற்கு உருவாக்குவோர், பயன்பாட்டிற்கு கொள்கை வகுப்போர் ஆகிய இருதரப்பினருக்கும் தொடர்புத் தளமாகவும் செயல்படும்.
प्रविष्टि तिथि:
17 JUN 2023 8:14PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), உதவும் நல்வாழ்வுத் தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையத்தைத் (NCAHT-IITM) தொடங்கியுள்ளது. உதவும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) முன்முயற்சியாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
(உதவும் தொழில்நுட்பங்கள் என்பது மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது மூப்பால் பாதிக்கப்பட்டோருக்கான சாதனங்களைக் குறிக்கும்)
இதற்கான தொடக்க விழா ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா-வில் இன்று (17 ஜூன் 2023) நடைபெற்றது. தலைமை விருந்தினராக இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பால், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் தலைவர் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா, ஐஐடி மெட்ராஸ்-ன் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத்தின் (R2R2) தலைவர் பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையம் (R2R2) இதனை செயல்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. உதவும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை நிகழ்த்திக் காட்டும் மையமாக NCAHT-IITM செயல்படும். தொழில்நுட்பத்தின் சாத்தியக் கூறுகளை வெளிப்படுத்துதல், பொறியாளர்கள்/ உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்குவோர், கொள்கை வகுப்போர், பொதுமக்கள் ஆகியோரின் எண்ணங்களில் ஏற்படும் வேறுபாடுகளைக் குறைத்தல், சிறந்த உதவும் தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளை வகுத்தல் ஆகியவற்றுக்கு இம்மையம் வழிவகுக்கும்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவின் '10எக்ஸ் உதவும் தொழில்நுட்பத் திட்டத்'துடன் இணைந்து NCAHT-IITM மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சமூக உள்ளடக்கத்தை இம்மையம் அதிகரிக்கச் செய்கிறது. பயனர்கள், கொள்கை வகுப்போர், மறுவாழ்வுத் துறையினர், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரிடையே உதவி சாதனங்களின் மாற்றும் ஆற்றலை வலுப்படுத்தும் அனுபவக் களமாகவும் இந்த மையம் செயல்படும்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கைச் சவால்களை பல்வேறு அனுபவ நிகழ்வுகள் மூலம் NCAHT-IITM எடுத்துரைக்கும். பயனர்களுக்கான வடிவமைப்புகளை உருவாக்கும் மையம், சக்கர நாற்காலித் திறன் ஆய்வகம், திறந்தவெளி கண்டுபிடிப்பு இணையதளம், கொள்கை ஆராய்ச்சிக் குழு, தகவல் பரப்பு மையம் ஆகியவற்றில் கூடுதலாக கவனம் செலுத்தப்படும். இவையனைத்தும், ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாட்டு முயற்சிகளை முழுமையாக்கக் கூடிய R2D2 மையத்தின் 'உதவும் தொழில்நுட்ப' சூழலை மேம்படுத்தும்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், "உடல் சவால்கள் உள்ளவர்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய, உள்ளடக்கிய கல்வியில் ஐஐடி மெட்ராஸ் உறுதியாக இருந்து வருகிறது. இந்த மையத்தின் அனுபவ சூழல், நமது முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல், வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்" எனத் தெரிவித்தார்.
பயன்பாட்டிற்கு உருவாக்குவோர், பயன்பாட்டிற்கு கொள்கை வகுப்போர் இடையே ஒரு தளமாக NCAHT-IITM செயல்படும். அதே நேரத்தில் உதவும் தொழில்நுட்பம், மறுவாழ்வு வல்லுநர்கள், தன்னார்வ நிறுவனங்களுக்கு பயிற்சிக் களமாகவும் இயங்கும். முதன்மையான இயக்கக் குறைபாடுகள் மீது NCAHT-IITM கவனம் செலுத்தும். இதர குறைபாடுகள் குறித்து ஐஐடி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, NISH திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள NCAHT மையங்கள் கவனம் செலுத்தும்.
நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா, ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் ஆகியவற்றின் தலைவர் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறும்போது, "இம்மையம் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவின் 10X உதவும் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சாதனங்களை உருவாக்கவும், பயனர்கள் அனுபவங்களைப் பெறவும், சாதனங்களை மேம்படுத்தும் வகையில் கருத்துகளை அளிக்கவும், இறுதியாக தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும்" என்றார்.
இந்நிகழ்வின்போது, உலகெங்கும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்காக, கங்கா அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு அதில் பயிற்சி மேற்கொள்ளவும், சுதந்திரமாகப் பயன்படுத்தவும் சுயபயிற்சி வீடியோ வெளியிடப்பட்டது. தொடக்கநிலை, இடைநிலை, மேம்பட்ட நிலை என மூன்று தொகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த வீடியோக்களில் சக்கர நாற்காலியைத் தேர்ந்தெடுத்தல், கடினமான பாதைகளில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. பயனர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே இந்த தொகுப்புகளைப் பார்க்கவும், தங்களுக்கு ஏற்ற வேகத்தில் கற்றுக் கொள்ளவும் முடியும். NCAHT-IITM-ல் உடல்சக்கர நாற்காலித் திறன் திட்டத்தை நிறைவு செய்வதுடன், இந்த ஒத்துழைப்புத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை ஒன்றிணைத்து புதிய தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோரின் வாழ்வை மேம்படுத்துகிறது.
R2D2- ஐஐடி மெட்ராஸ் மற்றும் NCAHT-IITM தலைவரான பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் கூறும்போது, "R2D2ல் நாங்கள் உருவாக்கிய உதவும் தொழில்நுட்ப சூழலை மேலும் வலுப்படுத்த NCAHT-IITM உதவிகரமாக இருக்கும். உதவும் தொழில்நுட்பத்தை இந்தியாவில் மட்டுமின்றி அதனையும் தாண்டி பிற இடங்களில் மாற்றத்தை உருவாக்குவதே எங்களது இலக்காகும். NCAHT அனுபவங்களின் வாயிலாக, சுற்றுச்சூழலால் இயலாமை திணிக்கப்படலாம் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இருப்பினும் சரியான உதவும் தொழில்நுட்பம், பயிற்சி ஆகியவை திறம்பட செயல்படவும், வாழ்க்கையை முழுமையாக வாழவும் உதவிகரமாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, இம்மையத்தின் இலக்கை தங்கள் ஆதரவையும், உணர்வையும் அளிக்கும் வகையில் ஏற்கனவே ஏராளமான கூட்டாளர்கள் இணைந்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகேமையம் (R2D2), மனித நடமாட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளிலும், இயக்கக் குறைபாடு உள்ளவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் உதவும் சாதனங்களின் வடிவமைப்பிலும், மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது. R2D2 பொறியாளர்கள் இந்தியாவில் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் மறுவாழ்வுத் தேவைகளுக்கான மலிவு விலைத் தயாரிப்புகள், மருத்துவ நிபுணர்கள், தன்னார்வ நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். வடிவமைப்புகளை களபரிசோதனை செய்து, உயிரியக்கவியல் மற்றும் செயல்பாட்டு நிலையில் இருந்து 'உதவும் சாதன' வடிவமைப்புகளை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி சூழலை மேம்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
***
AD/DL
(रिलीज़ आईडी: 1933118)
आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English