சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தனியார் துறையின் மூலதனச் செலவு வரும் ஆண்டுகளில் வளர்ச்சிக்கான பங்களிப்பில் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும்- முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி அனந்த நாகேஸ்வரன்
प्रविष्टि तिथि:
15 JUN 2023 4:02PM by PIB Chennai
நிதியாண்டு 23-ல் இந்தியாவில் தற்போதைய ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது என்றும் இறுதி நிலவரத்தின் போது இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி அனந்த நாகேஸ்வரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் சம்மேளனம் (ஃபிக்கி) ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் கலந்துரையாடல் அமர்வில் உரையாற்றிய அவர், இந்தியாவின் வளர்ச்சித்திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்தார். பெருந்தொற்றால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வலுவடைந்து வரும் தொடர்ச்சியான 2 முக்கியமான ஆண்டுகளை நாம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அடிப்படையான அம்சங்களை சரிசெய்ய வேண்டியதன் காரணமாக நிதியாண்டு 23-ல் 3-வது காலாண்டில், குறைவான வளர்ச்சி இருந்தது பற்றி விவரித்த அவர், இது பொருளாதார வேகத்தில் ஏற்பட்ட இழப்பு அல்ல என்றார். நிதியாண்டு 24-க்கான கண்ணோட்டத்தின் படி, ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதற்கு நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வளர்ச்சி எண்ணுக்கான தடைகள் சரிசெய்யப்பட்டு வளர்ச்சி இலக்கு அடையப்படும் என்றும் அவர் கூறினார்.
உலகளாவியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் வளர்ச்சிக் குறித்த முக்கிய அம்சமாக அவரது உரை அமைந்திருந்தது. 2014-ல் 10-வது பெரிய பொருளாதாரமாக நாம் இருந்த நிலையில், 2027-ல் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். இந்த முன்னேற்றத்திற்கு சரியான விசயங்களை நாடு தொடர்ந்து செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து உலகளாவிய ஜிடிபி வளர்ச்சி 6 மடங்கு உயர்ந்திருப்பதில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றி டாக்டர் நாகேஸ்வரன் குறிப்பிட்டார். இந்த ஆண்டு உலகளாவிய ஜிடிபி-யில் 3-வது பெரிய பங்களிப்பாளராக இந்தியா இருக்கும் என்று அவர் கூறினார். தனிப்பட்ட நுகர்வில் பெருந்தொற்றின் தாக்கம் பற்றிக் குறிப்பிட்ட அவர், பின்னடைவுகள் இருந்த போதும் தனிப்பட்ட நுகர்வுக்கான போக்கு பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது என்றார்.
வேளாண் துறையின் வலிமையை எடுத்துரைத்த அவர், விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகளைக் கையாள்வதற்கான அதன் தயார் நிலையை வலியுறுத்தினார். தொழில்துறை, சேவைகள், கட்டுமானத்துறை ஆகியவற்றின் வலுவான வளர்ச்சி காரணமாக பொருளாதாரம் விரிவடைந்திருப்பதை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவும் எடுத்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தி புள்ளிவிவரம் காரணமாக நிறுவனங்களின் விரிவாக்கத்தில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் இது பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு செல்வதன் அறிகுறி என்றும் அவர் கூறினார். இது மேலும் விரிவாகும் என்றும் நிறுவனங்களிடையே நம்பிக்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் துறையின் மூலதனச் செலவு வரும் ஆண்டுகளில் வளர்ச்சிக்கான பங்களிப்பில் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்று டாக்டர் நாகேஸ்வரன் தெரிவித்தார். ஊடக நுகர்வு பற்றிய கவலையை ஒப்புக்கொண்ட அவர், நடப்பு நிதியாண்டில் நான்காவது காலாண்டில் இதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை எடுத்துரைத்தார். ஒற்றை இலக்க வளர்ச்சி விகிதத்தில் ஊரகப் பகுதிகளின் ஊதியம் அதிகரித்துள்ளது என்றும், இது நுகர்வுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். நகர்ப்புறத் தேவைகள் பற்றி பேசிய அவர், பயணி வாகன விற்பனை மற்றும் புதிய வீட்டுவசதியின் வலுவான வளர்ச்சியை எடுத்துக்காட்டினார்.
பொருளாதார மீட்சிக்கு உதவியாக இருக்கும் வகையில், நிதி சார்ந்த பொறுப்புத் தன்மையில் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் கோடிட்டுக் காட்டிய அவர், நிதிப்பற்றாக்குறை இலக்கு 5.9 சதவீதத்திலிருந்து குறைந்து வருவதையும் நிதியாண்டு 26-ல் 4.5 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் எடுத்துரைத்தார்
எதிர்கால வளர்ச்சிக்கு இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் முக்கிய அம்சமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் வளர்ச்சி அடைந்த பொருளாதாரங்களையும் விஞ்சி, குறைந்த செலவிலும் நீடித்த வகையிலும் அனைவருக்கும் டிஜிட்டல் சேவைகள் கிடைப்பதற்கான இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மேம்பாடு அரசு – தனியார் துறை பங்களிப்பு மூலம் மேம்பட்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார்.
நாட்டின் போக்குவரத்து திறன் மேம்பாட்டிற்கான அரசின் முயற்சிகளை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்துள்ள நிலையில், நீண்டகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தரமேம்பாடு, ஆகியவற்றில் தனியார் துறையினரும் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழலின் தாக்கம் அதிகரித்திருப்பதை அங்கீகரித்த அவர், பெருநகரப் பகுதிகளுக்கு அப்பாலும் இது விரிவடைந்து தொழில்முனைவை ஊக்குவிப்பதோடு வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது என்றார்.
பெருந்தொற்றுக் காலத்தில் சில ஆண்டுகள் பள்ளிப் படிப்பில் ஏற்பட்ட இழப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கு கல்விச் சீர்த்திருத்தங்களை டாக்டர் நாகேஸ்வரன் வலியுறுத்தினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பாளர்களாக பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பதை அவர் எடுத்துக்காட்டினார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற ஃபிக்கியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் தலைவர் டாக்டர் ஜிஎஸ்கே வேலு, 2022-23-க்கான ஜிடிபி வளர்ச்சியில் 7.2 சதவீதத்துடன் உள்ள இந்தியா, உலகளவிலான பெரிய பொருளாதாரங்களில் அதிவேகமாக வளரும் நாடாக உள்ளது என்றார். இந்தியாவின் நூற்றாண்டு என்ற கருத்தில் கவனத்தை ஈர்த்த அவர், இந்த முன்னோக்கிய சிந்தனை 2047-க்குள் உயர் வருவாய் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார். எளிதாக நிதி கிடைத்தல், மேம்படுத்தப்பட்ட எளிதான வணிக நடைமுறைகள், ஆகியவற்றின் மூலம் 2030-க்குள் 10,000 சிறிய மற்றும் 1,000 நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றியும் அவர் எடுத்துரைத்தார். 2030 வாக்கில் மின்சாரத்தின் தேவை இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுவதால் எரிசக்தி சுதந்திரம் மற்றும் குறைந்த செலவில் தூய்மையான எரிச்கதிக்கான அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு சேமிப்பை அதிகரிப்பது அவசியம் என்று வலியுறுத்திய ஃபிக்கி மூலதனச் சந்தைகள் குழுவின் தலைவர் திரு சுனில் சாங்காய், வேலைவாய்ப்பு உருவாகத்திற்கும் வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கும் சுற்றுலா என்பது மிக முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில், நன்றியுரை ஆற்றிய ஃபிக்கி தமிழ்நாடு மாநில கவுன்சிலின் இணைத் தலைவர் பூபேஷ் நாகராஜன், இன்னும் 4 ஆண்டுகளுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று தெரிவித்தார். உலக அளவில், உணவுப்பொருள் வழங்கும் நாடாக விளங்கும் இந்தியா, பொருள் உற்பத்தியின் குவி மையமாகவும், டிஜிட்டல் சூப்பர் பவராகவும் விளங்குகிறது என்று அவர் கூறினார். தொழில் துறைகளுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் தொழில்துறையின் தொழில்முனைவு உணர்வு மூலம் இது சாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.




***
(रिलीज़ आईडी: 1932652)
आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English