சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கடற்கரையைத் தூய்மைப்படுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு

Posted On: 08 JUN 2023 12:18PM by PIB Chennai

கடற்கரைகளைத் தூய்மைப்படுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். உலகப் பெருங்கடல்கள் தினத்தை ஒட்டி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா 7,500 கி.மீ. க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது எனவும்,  நாம் பெருங்கடல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுடன் நேரடி மற்றும் தீவிரத் தொடர்பை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். மேலும்,  சென்னை அழகிய கடற்கரையைக் கொண்டுள்ளது.  நாம் கடற்கரையைப் பேணிகாக்கவும் கடல்வாழ் உயிரினங்களின் நீடித்த வாழ்விற்கும் மிக முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார். மேலும், இன்று கடற்கரைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்தார்.  இந்தியா கடற்கரைப் பாதுகாப்பில் உலக அளவில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்று கூறிய அமைச்சர்,  இந்தியாவை போன்றே ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதியில் பல்வேறு சிக்கல்களை நார்வே சந்தித்து வருகிறது என்றும் பெருங்கடல்கள் பாதுகாப்பில் இந்தியாவும் நார்வேயும் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.  கடற்கரைகளை சுத்தப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதைக் காண முடிகிறது எனவும், கடற்கரையோரம் வாழும் மீனவர்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் நீடித்த வாழ்விற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றும் கடற்கரைப் பாதுகாப்புக் குறித்து சென்னை மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து கடற்கரை நகரங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய புவி அறிவியல் துறை செயலர் திரு. ரவிச்சந்திரன், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் திரு. ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

***



(Release ID: 1930701) Visitor Counter : 107


Read this release in: English