சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் பரிமாற்றத் திட்டம்

Posted On: 18 MAY 2023 11:54AM by PIB Chennai

நமது நாட்டின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டாட, இந்திய அரசு ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகத்தின் மூலம் யுவ சங்கம் (மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சிகள்) ஏற்பாடு செய்கிறது. மேலும் உள்துறை அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சுற்றுலா மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இந்த சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

யுவ சங்கம், முக்கியமாக உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தேசம் முழுவதிலும் இருந்து இளைஞர்களை உள்ளடக்கிய கலாச்சார மற்றும் தொழில்நுட்ப சுற்றுப்பயணங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு நடத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசமும், மேற்கு வங்கமும் ஒரு ஜோடியாக இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 49 பேர் கொண்ட குழு என்ஐடி புதுச்சேரியில் தங்கி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 18/05/2023 முதல் 24/05/2023 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இச்சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழா காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் இன்று நடைப்பெற்றது இதில் திரு. A. குலோத்துங்கன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், முனைவர் ஞா. அகிலா, இயக்குனர் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி மற்றும் கழகத்தின் பொறுப்பு இயக்குனர் முனைவர் கணேசன் கண்ணபிரான், கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன், கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேற்கு வங்கப் பிரதிநிதிகள் தங்கள் சுற்றுப்பயணத்தின் போது பின்வரும் சுவாரஸ்யமான இடங்களுக்குச் செல்வார்கள்: தரங்கம்பாடி ஓசோன் கடற்கரை, டேனிஷ் கோட்டை, அருங்காட்சியகம், காரைக்கால், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, பூம்புகார், சிதம்பரம் நடராஜர் கோயில், பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், ராஜ் நிவாஸ், அரவிந்த். ஆசிரமம், ஆரோவில், சட்டமன்றம், அருங்காட்சியகம், ஒயிட் டவுன், நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தாராசுரம் மற்றும் பெரிய கோயில், தஞ்சாவூர் மற்றும் சரஸ்வதி மகால்.

என்ஐடி புதுச்சேரி இந்த பயணங்களை மைய அலுவலகமாக ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு பார்வையாளரும் ஒரு பிரத்யேக உள்ளூர் நண்பருடன் தொடர்புபடுத்தப்படுவார்கள். விருந்தினர் உள்ளூர் நண்பர் வீட்டிற்குச் சென்று புதுச்சேரி மக்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வார். மேற்கு வங்க பிரதிநிதிகள் என்ஐடி புதுச்சேரியில் தங்கியிருக்கும் காலத்தில் தாரை தப்பட்டை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்வார்கள். இந்த நிகழ்ச்சிகளுடன், காரைக்கால் மாவட்ட கல்லூரி மாணவர்களும் பார்வையாளர்களுக்கு கலைகளை வெளிப்படுத்துவார்கள்.

  

***


(Release ID: 1925075) Visitor Counter : 329


Read this release in: English