சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடியுடன் இஸ்ரேல் பங்குதாரராக இணைந்து ‘ இந்தியா – இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம் ’ அமைக்கப்பட உள்ளது
Posted On:
17 MAY 2023 3:25PM by PIB Chennai
சென்னை ஐஐடியில் நீர்வள நிர்வாகம் மற்றும் தண்ணீர் தொழில்நுட்பங்களில் ஆய்வு மேற்கொள்ள ‘ இந்தியா – இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம் ’ அமைக்கப்பட உள்ளது. இதில் இஸ்ரேல் அரசுடன் சென்னை ஐஐடி பங்குதாரராக இருக்கும்.
இதற்கான விருப்பக்கடிதம் மே 9 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது. இதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் திரு நவோர் கிலான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்திய வெளியுறவு அமைச்சர் திரு எஸ் ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் திரு ஏலி கோஹென் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய நீர் ஆதாரத்துறையில் தீர்வுகளுக்கான நீடித்த நிர்வாகப் பணி, இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இஸ்ரேலில் மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள் அமலாக்கத்தை உறுதி செய்வது ஆகியவை இந்த புதிய மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மையம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அம்ருத் இயக்க இலக்குகளை அடைவதற்கு உதவி செய்யும். மேலும் தனித்த ஒப்பந்தங்கள் மூலம் தொழில்நுட்பத் தீர்வுகளை அமல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற உதவும்.
இந்த மையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, மனிதகுலத்திற்கு இயற்கை அன்னையின் மகத்தான கொடையாகத் திகழும் தண்ணீரை முறையாக பயன்படுத்துவதற்கும், சேமிப்பதற்குமான பணியில் இது மிகவும் முக்கியமான ஒத்துழைப்புகளில் ஒன்று என தாங்கள் கருதுவதாகக் கூறினார்.
குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் நிர்வாகம், தலையீட்டிற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்குவது குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் விவாதிப்பது, கலந்தாலோசிப்பது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள பணி செய்வது ஆகியவையும் இந்த மையத்தின் குறிக்கோளாகும்.
=========
AP/SMB/MA/KRS
(Release ID: 1924755)
Visitor Counter : 145