சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய மாணவர் படை வீரர்களுக்கு ஆவடி போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பு முகாம்

Posted On: 11 MAY 2023 3:40PM by PIB Chennai

பொக்ரான் அணு ஆயுத சோதனை வெற்றியின் 25-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வின் முதன்மை ஆய்வகமான ஆவடியில் உள்ள  போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (சி.வி.ஆர்.டி.இ) மே 9 முதல் 13 வரை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ முகாம் நடைபெற்று வருகிறது.

புதுதில்லியில் உள்ள தேசிய மாணவர் படை தலைமை இயக்குநரகத்தின் சார்பாக சென்னை, சண்டிகர் மற்றும் புனேவில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குநரகங்களின் கீழ் நடைபெறும் முகாம்களில் நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொள்கின்றனர். விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடலின் மூலம் வீரர்களிடையே டி.ஆர்.டி.ஓ-வின் பங்களிப்பு குறித்து எடுத்துரைப்பதற்காக இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் இயக்குநரகம், கேரளா மற்றும் லட்சத்தீவு இயக்குநரகம், கர்நாடகா மற்றும் கோவா இயக்குநரகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா இயக்குநரகம், ஒடிசா இயக்குநரகம், மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் இயக்குநரகம் ஆகிய ஆறு தேசிய மாணவர் படை இயக்குநரகங்களிலிருந்து தலா 30 வீரர்கள் ஆவடியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கின்றனர்.

ஆவடி சி.வி.ஆர்.டி.இ நிறுவனத்தில் உள்ள நவீன தொழில்நுட்பத்தில் இந்திய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படும் முக்கிய போர் ஊர்திகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் வளாகத்தை மே 10-ஆம் தேதி வீரர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். அணு எரிசக்தி சம்பந்தமாக பல்வேறு தலைப்புகளில் வீரர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பிரபல விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடியது மற்றும் டி.ஆர்.டி.ஓ வளாகத்தைச் சுற்றிப் பார்த்ததன் வாயிலாக இளம் வீரர்களிடையே நேர்மறையான தாக்கம் ஏற்பட்டது. கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கூடைப்பந்து, கைப்பந்து விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

***

AD/BR/KPG

 


(Release ID: 1923365) Visitor Counter : 147