சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முக்கிய கலாச்சார நிகழ்வுகளை நாம் கொண்டாடி வருகிறோம்: பிரதமர்
தேசமே முதலில் எனும் சர்தார் படேல், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் சிந்தனையை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் அடையாளப்படுத்துகிறது
கடினமான சூழ்நிலைகளிலும் கூட புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சக்தியை இந்தியா பெற்றுள்ளது
Posted On:
26 APR 2023 8:18PM by PIB Chennai
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
தாம் முதலமைச்சராக இருந்த போது 2010-ம் ஆண்டு மதுரையில் இதுபோன்ற சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், அதில் சௌராஷ்டிராவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து விருந்தினர்கள் அதே பாசத்துடன் சௌராஷ்டிரா வந்துள்ளதாக அவர் கூறினார்.
குஜராத்தில் சுற்றுலா அனுபவத்தை விருந்தினர்கள் உணர்ந்ததாகவும், கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் கடந்த காலத்தின் விலைமதிப்பற்ற நினைவுகள், தற்காலத்திற்கான அனுபவங்கள், எதிர்காலத்திற்கான தீர்மானங்கள் மற்றும் உத்வேகங்களை காணலாம் என்று தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சிக்காக சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் அவர் வாழ்த்து கூறினார்.
இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முக்கிய கலாச்சார நிகழ்வுகளை நாம் கொண்டாடி வருகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இது தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிராவின் சங்கமமாக மட்டுமல்லாமல், தேவி மீனாட்சி, தேவி பார்வதி உருவில் சக்தியை வழிபடும் திருவிழாவாகவும் உள்ளது என்று கூறினார். அத்துடன், கடவுள் சோம்நாத், கடவுள் ராம்நாத் ஆகிய வடிவில் சிவனை கொண்டாடும் விழாவாகவும் இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேசமே முதலில் எனும் சர்தார் பட்டேல், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் சிந்தனையை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் அடையாளப்படுத்துவதாக அவர் கூறினார். நாட்டை கட்டமைப்பதில் இந்த பாரம்பரியத்தையொட்டி நாம் முன்னோக்கி செல்லவேண்டும் என்று பிரதமர் கூறினார்.
பன்முகத் தன்மையை சிறப்பம்சமாக இந்திய நாடு காண்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த பன்முகத் தன்மை, நம்மை பிரிக்காமல், நமது பிணைப்பையும், உறவையும் வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். பல்வேறு நீரோடைகள், இணையும் போது, சங்கமம் உருவாகுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கும்பமேளா போன்ற நிகழ்வுகள் நதிகளின் சங்கமத்தில் நடைபெறுவதாகக் கூறினார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் இன்று புதிய வடிவத்தை நோக்கி முன்னோக்கி செல்வது, இந்த சங்கமத்தின் சக்தியாகும் என்று அவர் தெரிவித்தார். சர்தார் படேலின் ஆசீர்வாதத்துடன் இதுபோன்ற சிறப்பான விழாக்கள் மூலம் நாட்டின் ஒற்றுமை வடிவமைக்கப்படுவதாக அவர் கூறினார். ஒரே இந்தியா, உன்னத இந்தியா, என்று கனவு கண்டு தங்களது உயிரை தியாகம் செய்த லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீர்ரகளின் கனவுகளையும் இது நிறைவேற்றுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கடினமான தருணங்களிலும் கூட, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சக்தி இந்தியாவில் உள்ளதாகவும், சௌராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றின் வரலாறு இதற்காக நமக்கு உறுதி கூறுவதாகவும் அவர் கூறினார்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவ தொலைநோக்குப் பார்வையால் தமிழ்நாட்டிற்கும், குஜராத்துக்கும் இடையேயான பல்லாண்டு கால உறவுகள் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றார். பிரதமரின் முயற்சிகள் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள் முதல்முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் தொன்மையான கலாச்சார பாரம்பரியத்தை புகழ்ந்துரைத்த முதலமைச்சர், ஆதி சங்கராச்சாரியார் இந்தியாவின் ஆன்மீகத்திற்கு பாதை வகுத்தார். சாணக்கியர் அரசியலுக்கான ஒற்றுமையை கொண்டுவந்தார். சர்தார் வல்லபாய் படேல் நவீன இந்தியாவை புவியியல் ரீதியாக ஒன்றுபடுத்தினார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரங்களுடன் இந்தியாவின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற மந்திரத்தை முன்வைத்துள்ளார் என்று திரு பூபேந்திர படேல் கூறினார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பேசுகையில், திரு நரேந்திர மோடி பிரதமரானதில் இருந்து வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது என்றும், அவரது தொலைநோக்குப் பார்வையால் உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியிருக்கிறது என்றும் கூறினார்.
நாகாலாந்து ஆளுநர் திரு இல கணேசன் பேசுகையில், குஜராத் முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்த போது, தமிழ்நாட்டில் வசிக்கும் சௌராஷ்டிர மக்களை சந்தித்ததை நினைவுகூர்ந்தார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான உறவுகள் வலுப்படும் என்று அவர் கூறினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், சௌராஷ்டிரா பகுதிக்கு பயணம் செய்த போது தமிழ்ப் பாடகர் டி எம் சௌந்தரராஜனை பேரார்வத்துடன் நினைவுகூர்ந்தார். அவர் இயற்றிய பாடல் ஒன்றை குறிப்பிட்ட அமைச்சர், இது பிரதமர் நரேந்திர மோடியையும் மற்றும் பலரையும் கவர்ந்ததாக அவர் தெரிவித்தார். ஆயிரம் ஆண்டு இடைவெளிக்கு பின் தமிழ்நாட்டுக்கும், சௌராஷ்டிராவுக்கும் இடையேயான உறவை புதுப்பித்ததற்காக டி எம் சௌந்தரராஜனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டுசேலை சௌராஷ்டிர மக்களால் நெய்யப்பட்டதாகவும் டாக்டர் எல் முருகன் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் பேசிய மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி, சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் இலட்சினை, இரு கலாச்சாரங்களின் சங்கமத்திற்கு சிறந்த உதாரணம் என்று கூறினார். நம்முடைய வரலாற்றின் முக்கியமான அத்தியாயத்தை புதிய கோணத்தில் புதுப்பித்திருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கட்டாயம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார். விடுதலையின் அமிர்தக் காலத்தில், நம்முடைய கலை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை சங்கமிப்பதற்காக சிறப்பான பணிகளை பிரதமர் மோடி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நமது மூதாதையர்களின் கனவு, உண்மையிலேயே இன்றைக்கு நனவாகி வருவதாகக் கூறிய திருமதி மீனாட்சி லேகி, குஜராத்தின் சௌராஷ்டிர மக்களின் படோலாவைவிட, காஞ்சிபுரத்தின் பட்டுப்புடவை புகழ்பெற்றது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ருஷிகேஷ் படேல், இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடாக இருந்தபோதிலும், அனைவர் மனதிலும் நாம் இந்தியர் என்ற எண்ணம் எப்போதுமே நிலைத்திருப்பதே அவர்களை சிறப்புமிக்கவர்களாக மாற்றியிருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போது, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் திரு.பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குறித்த நூலையும் வெளியிட்டார். சௌராஷ்டிரக் கலைஞர்கள் தமிழ் திரைப்பட பாடகர் டி.எம். சௌந்தரராஜனின் சில பாடல்களைப் பாடினர். இதைத்தவிர சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த விளையாட்டுக் குழுக்களுக்கு குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
***
AD/SMB/IR/ES/RJ/AG
(Release ID: 1920027)
Visitor Counter : 138