சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால், டிஸ்கவரி வளாகத்தில் ஐஐடி மெட்ராஸ்-ன் அதிநவீன ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்

Posted On: 24 APR 2023 6:24PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) டிஸ்கவரி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிகள், கடற்கரைகளுக்கான தேசியத் தொழில்நுட்ப மையத்தை இன்று (24 ஏப்ரல் 2023) திறந்துவைத்தார்.

இந்த மையம் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகும். துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு இந்த மையம் செயல்பட்டு வருகிறது. துறைமுகம், கடலோர மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, அவற்றுக்கான பொறியியல் அம்சங்களில் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்கி, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரைவான கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துவதும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

தொடக்க விழாவில் உரை நிகழ்த்திய மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால், "வண்டல்மண் போக்குவரத்து, வழிகாட்டல், அகழ்வு மற்றும் வண்டல்மண், துறைமுகம் மற்றும் கடலோரப் பொறியியல், தன்னாட்சி செயல்பாடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாணவர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்களுக்கு பயன்படும் வகையில் பிரத்யேகமான ஒருங்கிணைந்த மையமாக இந்த மையம் செயல்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால், இந்த மையத்தின் மூலம் மட்டும் ரூ.1,500 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என்றார். ஐரோப்பா உட்பட உலகின் சிறந்த நிறுவனங்களுடன் இதனை ஒப்பிடலாம் என்றும் முன்னோடியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டுவோராகவும் எங்களை நிலைநிறுத்திக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் முரளி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மாலினி ஷங்கர், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் திரு சுனில் பாலிவால், நியூமங்களூர் துறைமுக ஆணையத் தலைவர் டாக்டர் வெங்கட ரமணா மற்றும் பேராசிரியர்கள், ஐஐடி ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

டிஸ்கவரி வளாகம் குறித்த பின்னணி

டிஸ்கவரி வளாகத்தை இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 14 பிப்ரவரி 2021 அன்று தொடங்கி வைத்தார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சிப் பணிகள் அதிவேக வளர்ச்சி கண்டிருக்கின்றன. 2019-ம் ஆண்டில் இக்கல்வி நிறுவனம் 'இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எமினென்ஸ்' என அறிவிக்கப்பட்ட பிறகு இதன் செயல்பாடுகள் மேலும் ஊக்கம் பெற்றன. பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியால் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், முகமைகள் மற்றும் தொழில்துறை ஸ்பான்சர்களால் ஆராய்ச்சி மையங்களுக்கு நிதி அளிக்கப்படுகின்றன. இந்த மையங்களில் பல்வேறு பிரத்யேக வசதிகளை உருவாக்க வேண்டிய நிலையில், அதற்கு போதிய இடவசதி தேவைப்படுகிறது.

ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சித் தடம் மிக வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி வசதிகளை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான ஆராய்ச்சி வளாகமாகவே தையூரில் உள்ள சாட்டிலைட் வளாகம் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது.

2010-2017 ஆண்டுகளில் நிறுவப்பட்ட முன்னோடியான ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவிற்குப் பின், ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ள அடுத்ததொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மையமாக டிஸ்கவரி வளாகம் திகழும்.

***

AD/SMB/AG/RR


(Release ID: 1919247) Visitor Counter : 269


Read this release in: English