நிதி அமைச்சகம்
இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் இரண்டாவது ஜி-20 கட்டமைப்பு பணிக்குழு (FWG) கூட்டம் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்தது
Posted On:
25 MAR 2023 5:35PM by PIB Chennai
இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் இரண்டாவது ஜி-20 கட்டமைப்பு பணிக்குழு (FWG) கூட்டம் 2023 மார்ச் 25-ம் தேதியன்று சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த இரண்டு நாள் கூட்டத்திற்கு இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து கருவூலத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் திருமதி கிளேர் லோம்பார்டெல்லி ஆகியோர் தலைமை வகித்தனர். ஜி-20 உறுப்பு நாடுகளில் இருந்தும், சர்வதேச அமைப்புகளிலிருந்தும் சுமார் 87 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கட்டமைப்பு பணிக்குழு சர்வதேச பெரும் பொருளாதார சிக்கல்களில் கவனம் செலுத்துவதோடு வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (SSBIG) அடைய கொள்கை ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆலோசித்தது. இந்த நிகழ்வில் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், பணவீக்கம், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பின்மையினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டன.
இந்த விவாதத்தின்போது, உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பின்மை, காலநிலை மாற்றம் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்த உறுப்பினர்கள், இந்த ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். கூடுதலாக, WBG, IMF, FAO, IEA, NGFS மற்றும் OECD உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் இந்த சிக்கல்களை சமாளிப்பது குறித்த விரிவான தொழில்நுட்ப விளக்கங்களைச் எடுத்துரைத்தன.
உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் அபாயங்கள் பற்றிய விவாதம், உலகளாவிய பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும், வளர்ந்து வரும் நிதி அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. பல நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தியின் விலை எவ்வாறு உயர்த்தப்படுகின்றன, ஏழை நாடுகளை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்தும் உறுப்பினர்கள் ஆலோசித்தனர். குறுகிய கால ஆற்றல் பாதுகாப்பை, தூய்மையான ஆற்றலுக்கு மாற்றுவதற்கான நீண்ட கால கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் சமநிலைப்படுத்தும்போது, நாடுகள் எதிர்கொள்ளும் கடினமான வர்த்தக பரிமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமூகமான மாற்றத்தை எளிதாக்குவதற்கு முக்கியமான கனிமங்களின் இருப்பை உறுதி செய்தல் மற்றும் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்நாட்டு சேமிப்பை உருவாக்குதல், மாற்றத்திற்கான பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இரண்டாவது ஜி20 கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக, "பருவநிலை மாற்றம் மற்றும் மாறுதல் பாதைகளின் பெரும் பொருளாதார தாக்கங்கள்" என்ற அமர்வில் குழு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விவாத நிகழ்வில் ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பாளர் நாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 80 பிரதிநிதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல்வேறு மாற்றப் பாதைகளை பின்பற்றும் போது நாடுகள் எதிர்கொள்ளும் பெரிய பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குவது, கசிவுகளை நிர்வகிப்பதற்கான கொள்கை விருப்பங்களை ஆராய்வது ஆகியவை இதன் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் ப்ரூஜெல் ஐரோப்பிய சிந்தனைக்குழு உறுப்பினர் திரு. ஜீன் பிசானி-பெர்ரி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, ஐஐஎம் அகமதாபாத் பேராசிரியர் அமித் கார்க் நெறிப்படுத்திய குழு விவாதம் நடைபெற்றது. ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக டாக்டர் சு (கிரேஸ்) டியான், சிஓபி28 பிரதிநிதி திரு சவூத் அல்நூரனி, இத்தாலிய வங்கியின் சார்பில் டாக்டர் இன்ஸ் புவானோ, ஷெல் இந்தியா மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் திரு சுப்ரதா பாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக ஐஐடி சென்னை மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவை இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தின. நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்தியா மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் உரையாடினார். முக்கியமாக இந்த ஆண்டு இந்தியாவின் ஜி-20 தலைமை குறித்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு உணவு வகைகளை உண்ணும் வகையில், கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு ‘ராத்ரி போஜ் பர் சம்வாத்’ (இரவு உணவு உரையாடல்) நடத்தது. சென்னையின் சில முக்கிய இடங்களுக்கு சுற்றுலா சென்றபோது, ஜி-20 பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது.
இந்திய ரிசர்வ் வங்கி கொள்கைகளை வகுப்பதில் மக்களையும் பங்கேற்க வைப்பதற்கான 'ஜன் பாகிதாரி நிகழ்வுகளை நடத்தியது. நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பல உழவர்-உற்பத்தியாளர்கள் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து, மாணவர்களை இலக்காகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியும், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், தெருவோர வியாபாரிகளிடையே டிஜிட்டல் நிதிச் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கான நிகழ்வுகளும் நடைபெற்றன.
***
AD/PKV/CR/DL
(Release ID: 1910788)
Visitor Counter : 181