நிதி அமைச்சகம்

அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 31.01.2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.26,659 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு 8,73,362 கடன்பெறுவோர் பயனடைந்துள்ளனர்

நாடு முழுவதும் ரூ.3.61 லட்சம் கோடிக்கு உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டு, 1.19 கோடி கடன்பெறுவோர் பயனடைந்துள்ளனர்

Posted On: 13 MAR 2023 7:30PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றால்  பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மீண்டும் தொடங்கவும் தங்களின் கடன் நிலைமைகளை சமாளிக்கவும், தகுதியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ)  ஆதரவு அளிக்க தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 2020 மே மாதத்தில் அவசரகாலக் கடன் உத்தரவாதத்  திட்டம்  (இசிஎல்ஜிஎஸ்) தொடங்கப்பட்டது. தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 31.01.2023 நிலவரப்படி ரூ.3.61 லட்சம் கோடிக்கு உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டு, 1.19 கோடி கடன்பெறுவோர் பயனடைந்துள்ளனர்.

இந்தத் தகவலை நிதித்துறை இணையமைச்சர்  டாக்டர் கிசன் ராவ் கரத் மக்களவையில்  நேற்று (13.03.2023) எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். இசிஎல்ஜிஎஸ் குறித்த பாரத ஸ்டேட் வங்கியின் 23.01.2023 தேதியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, சுமார் 14.6 லட்சம் எம்எஸ்எம்இ கணக்குகளில் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் பிரிவில் உள்ள 98.3 சதவீத கணக்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இசிஎல்ஜிஎஸ் தொடங்கப்பட்டதிலிருந்து  எம்எஸ்எம்இ  கடன் கணக்குகள்  ரூ.2.2 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்து இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக 12 சதவீத எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் வாராக்கடன்களாக மாறுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்ட கடன் உத்தரவாதத் தொகையின் அளவு மற்றும்  பயனடைந்த கடன் பெற்றோர் எண்ணிக்கைப்பற்றி அமைச்சர் விவரித்தார். இதன்படி, 31.01.2023 நிலவரப்படி தமிழ்நாட்டில்  ரூ.26,659 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு 8,73,362 கடன்பெறுவோர் பயனடைந்துள்ளனர். புதுச்சேரியில்  439.18 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு 22,317 கடன்பெறுவோர் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1906553

***

SRI/SMB/RS/RR



(Release ID: 1906667) Visitor Counter : 135


Read this release in: Urdu , English