நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2023 5:33PM by PIB Chennai
2021 – 2022 ம் ஆண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 778.19 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2020 – 2021 ம் ஆண்டை ஒப்பிடுகையில் 8.67% அதிகமாகும். இந்த நிதி ஆண்டைப் பொறுத்தவரை பிப்ரவரி மாதம் வரை 785.24 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 15.14% அதிகமாகும். இந்தாண்டில் உற்பத்தி இலக்கு 911 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் இது 1012 டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி இறக்குமதியை குறைத்து தற்சார்பை அடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலக்கரி உற்பத்தி தொடர்பாக நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நிலக்கரி சுரங்கங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஒற்றைச் சாளர அனுமதிக்கான தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் பகிர்வு அடிப்படையில் வர்த்தக ரீதியிலான ஏலம் நடைபெறுகிறது. கோல் இந்தியா நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துகிறது. எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள கோல் இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது. கைவிடப்பட்ட சுரங்கங்களில் உற்பத்தியைத் தொடரவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இது போன்ற மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலக்கரி இறக்குமதி கடந்த 4 ஆண்டுகளில் குறைந்து வருகிறது. 2018 – 2019ம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி 235.35 மில்லியன் டன்னாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 186.06 டன்னாக இருந்தது.
இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் திரு.பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
***
AP/PLM/SG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1906525)
வருகையாளர் எண்ணிக்கை : 190