சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ்-ன் சிஎப்ஐ திறந்தவெளி அரங்கு 2023-ல் (CFI Open House) மாணவர்களால் உருவாக்கப்பட்ட 70 தொழில்நுட்பத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன

Posted On: 12 MAR 2023 4:12PM by PIB Chennai

3டி பிரிண்டிங், வானியல், ஏஐ/எம்எல் தொடங்கி டிரோன்கள், தானியங்கி வாகனங்கள், ஹைப்பர்லூப், தொழில்நுட்ப பொழுதுபோக்கு வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த கண்டுபிடிப்புகள் இதில் இடம்பெறுகின்றன.

சென்னை, 12 மார்ச் 2023: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்   (ஐஐடி மெட்ராஸ்) மாணவர் அமைப்பான புத்தாக்க மையம் (Centre for Innovation - CFI), ஐஐடி வளாகத்தில் இன்று (12 மார்ச் 2023) நடைபெற்ற வருடாந்திர திறந்தவெளி அரங்கு நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

சிஎப்ஐ திறந்தவெளி அரங்கு 2023-ல் 3டி பிரிண்டிங், வானியல், செயற்கை நுண்ணறிவு/ இயந்திரமொழி (AI/ML) தொடங்கி டிரோன்கள், தானியங்கி வாகனங்கள், ஹைப்பர்லூப், தொழில்நுட்பப் பொழுதுபோக்கு வரை வெவ்வேறு விதமான துறைகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சிஎப்ஐ திறந்தவெளி அரங்கில், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், சாத்தியமுள்ள கூட்டுமுயற்சியாளர்கள், முன்னாள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினருடனும் மாணவர்கள் தங்களின் பணிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பாகும்.

நிதியுதவி, 3டி பிரிண்டர்கள், லேசர் கட்டர்கள், மின்னணு பணிநிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளை மாணவர்களுக்கு இந்த அமைப்பு வழங்குகிறது. 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள், மாணவர்களால் நடத்தப்படும் பல்வேறு ஸ்டார்ட்-அப்கள் ஆகியவற்றுக்கு மூலாதாரமாக புத்தாக்க மையம் திகழ்ந்து வருகிறது.

மாணவர்களின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டிப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, "எந்தவொரு நாடும் தொழில்நுட்பத்தில் வல்லரசாக வேண்டுமெனில் தொழில்முனைவும், புத்தாக்கமும் அவசியமாகும். ஐஐடி மெட்ராஸ் தனது புத்தாக்க மையத்தின் மூலம் (CFI) இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எமது மாணவர்கள் தங்களின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்து பலமுறை செயல்முறை விளக்கங்களை செய்து காட்டி, பின்னர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளாக உருவாக்கியவற்றைத் தான் சிஎப்ஐ திறந்தவெளி அரங்கில் நீங்கள் காண்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டார்.

இந்தாண்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள புதிய தயாரிப்புகள் வருமாறு:

Ø மின்சக்தியில் இயங்கும் ஃபார்முலா பந்தயக் கார்

Ø முற்றிலும் சூரியசக்தியில் இயங்கும் மின்சார வாகனம்

Ø மென்மையான ரோபாடிக்ஸ் மூலம் உண்மையான மீனின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் மீன்போன்ற பயோமிமெடிக் ரோபோ

Ø கடற்கரையின் இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையில், அதன் மேற்பரப்பில் குப்பைகளை முற்றிலும் களையும் தானியங்கி கடற்கரை தூய்மைப்படுத்தும் ரோபோ.

Ø அதிவேக விர்ச்சுவல் ரியாலிட்டிக்காக சக்தி, வெப்பநிலை, அமைப்பு ஆகிய உணர்வுகளை அளிக்கும் கையுறை

Ø சென்றடைவதற்குக் கடினமான இடங்களிலும் காடுகளை வளர்ப்பதற்கான டிரோன்

Ø உற்பத்தி செய்யப்பட்ட பிஎல்ஏ இழைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துகள்களை நேரடியாகப் பயன்படுத்தும் 3டி பிரிண்டர்

Ø ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள ஒட்டுமொத்த மாணவர் அமைப்புக்கான சமூக செயலி

Ø ஏஐ டிஜே (செயற்கை நுண்ணறிவு சார்ந்த இசை வடிவ செயலி)

குறைந்த விலை மருத்துவ சாதனங்கள் முதல் நிலையான போக்குவரத்துக்கான சாதனங்கள் வரை எண்ணற்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி, இந்த சமூகத்திற்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த புத்தாக்க மையம் ஊக்குவித்து வருகிறது.

மாணவர்களின் பணிகளைப் பாராட்டிப் பேசிய ஐஐடி மெட்ராஸ் புத்தாக்க மையத்தின் ஆசிரிய ஆலோசகரான பேராசிரியர் பிரபு ராஜகோபால், "இந்த புத்தாக்க மையம் ஐஐடி மெட்ராஸ்-ன் சொந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது மட்டுமின்றி, இதுபோன்ற கல்விநிறுவன அமைப்புகளில் நாட்டிலேயே முன்னோடியாகவும் விளங்குகிறது. கற்றலுடன் செயல்முறை என்ற அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு முன் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் வழங்கிய நிதியைக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இக்கல்வி நிறுவன வளாகத்தில் படிக்கும் ஏராளமான இளங்கலை மாணவர்கள், அதிக எண்ணிக்கையிலான முதுகலை மாணவர்கள் என இந்த புத்தாக்க மையம் பரந்து விரிந்துள்ளது. பொழுதுபோக்கிற்காக இருந்து வந்த 15 கிளப்புகள், 6 போட்டிக் குழுக்கள், ஏராளமான ஆதரவுக் குழுக்கள் ஆகியவற்றுடன் ஐஐடி மெட்ராஸ்-ன் புத்தாக்க மையம் புதுமை செயல்பாடுகளின் கேந்திரமாக வளர்ந்துள்ளது. மழைக்காலத்தில் நகரில் தண்ணீர் தேங்குதல், பாதுகாப்பான தேர்தல்கள் தொடங்கி விண்வெளி ஆய்வு, மின்சாரம் மற்றும் மக்கள் பயன்பாட்டு சாதனங்கள் வரை சிக்கல்களைக் களையும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

பேராசிரியர் பிரபு ராஜகோபால் மேலும் கூறுகையில், "ஓபன் ஹவுஸ் என்பது புத்தாக்க மையத்தால் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அதன் விளைவாகத் தயாரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் முன்மாதிரிகள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட சுதா மற்றும் சங்கர் புத்தாக்க மையம் குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜகதீப் தன்கர் அவர்களால் அண்மையில்தான் தொடங்கி வைக்கப்பட்டது. அதனால், புத்தாக்க மையத்தின் திறந்தவெளி நிகழ்வு - 2023 ஆற்றல் நிரம்பியதாகவும், அற்புதமாகவும், புதிய உத்வேகமுடையதாகவும் அமைந்துள்ளது" என்றார்.

ஐஐடி மெட்ராஸ்-ல் புதுமையான தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக மூன்றே மூன்று கிளப்புகளுடன் 2008-ம் ஆண்டு புத்தாக்க மையம் தொடங்கப்பட்டது. 1981-ம் ஆண்டில் பட்டம் பெற்ற மாணவர்கள் இதற்கு நிதியுதவி அளித்தனர். 13-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குழுக்கள், 6 போட்டிக் குழுக்கள், 3 மேலாண் குழுக்களாக தற்போது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. பயோ இன்ஜினியரிங், அனாலிடிக்ஸ், ஏரோமாடலிங், ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், 3டி பிரிண்டிங், கம்ப்யூட்டர் விஷன், இயற்பியல், வானியல், ராக்கெட் தொழில்நுட்பம், சமூகக் கண்டுபிடிப்புகள், தயாரிப்பு வடிவமைப்பு, தொழில்நுட்ப பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இதில் உள்ளன.

இங்குள்ள அணிகளும், கிளப்புகளும் உலக சாதனைகள் பலவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளன. அண்மையில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை முதன்முறையாகப் பயன்படுத்தி 2022-ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் அனுபவங்கள்

சிஎப்ஐ திறந்தவெளி அரங்கு 2023-ல் பணிபுரிந்த திரு.அங்கித் சுரேஷ், திரு.தேவ் துமாலே (3-ம் ஆண்டு இயந்திரப் பொறியியல், டீம் ரப்தார் பார்முலா ரேசிங்) தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தபோது கூறுகையில், "சிஎப்ஐ என்பது ஊக்கமளிக்கும் இடமாகும். இக்கல்வி நிறுவனத்தில் புதுமை அம்சங்களில் ஆர்வம் கொண்ட ஒரே எண்ணமுடைய மாணவர்களுடன் ஒவ்வொரு நாளும் பணிபுரிந்தது மிகவும் அற்புதமானது. எங்களைப் போன்ற மாணவர்கள் பிடெக் படிக்கும்போதே தொழில்நுட்பத்தில் சாதனை படைக்க அனுமதிக்கின்றனர்.  ஒரே எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைக்கவும் ஏதுவான நல்லதொரு சூழலை புத்தாக்க மையம் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. எங்களின் பொறியியல் கருத்துக்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்து, தயாரிப்பை உருவாக்க அனுமதித்திருப்பது மகிழ்ச்சி அடைகிறது" என்றார்.

செல்வி கிரிஷ்மா மேத்தா, திரு. ஹிருஷவ்தாஸ் (2-ம் ஆண்டு, விண்வெளிப் பொறியியல், ஏரோகிளப்) கூறும்போது, "மாணவர் சார்ந்த திட்டத்தின் மூலம், தொழில்நுட்பத் திறன்களில் இருந்து குழு நிர்வாகம் வரை எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதையும், அது மட்டுமின்றி காப்புரிமை பெறுவது குறித்தும் அறிந்து கொண்டேன். எங்கள் குழு உறுப்பினர்களின் உற்சாகமும் அர்ப்பணிப்பும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்திருந்தது. இத்திட்டம் எங்களையெல்லாம் எங்கு இட்டுச் செல்லப்போகிறது என்பதைக் காண ஆவலாக உள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

திரு. ஜெயந்த் எஸ்கே (2-ம் ஆண்டு, பொறியியல் வடிவமைப்பு, டீம் அக்னிரத்) கூறுகையில், "வகுப்புகளில் நான் கற்றுக் கொண்டதை நடைமுறையில் செயல்படுத்தவும், தொழில்நுட்ப ரீதியாகப் பணிபுரியவும் புத்தாக்க மையம் வாய்ப்பு அளித்தது. இல்லையெனில் வேறெங்கும் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்காது. புத்தாக்க மையத்தில் என்னுடன் பணிபுரிந்த ஒவ்வொருவரும் புத்திகூர்மை உடையவர்கள்.இப்படி திறமையான நபர்கள் ஒரே இலக்கை நோக்கி ஒன்றிணைந்து உழைத்திருப்பதால் மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது. புத்தாக்க மையத்தின் போட்டிக் குழு ஒன்றில் பணியாற்றியது தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவியது மட்டுமின்றி, எனது மேலாண்மை மற்றும் தகவல் தொடர்புத் திறன்களையும், சிறந்த பணி நெறிமுறைகளையும் வளர்த்துக் கொள்ள உதவிகரமாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

2022-23ம் ஆண்டில் புதிய பரிமாணங்கள்

Ø புத்தாக்க மையத்தின் கிளப்புகளும் அணிகளும் 2022-23ம் ஆண்டில் 10 புதிய அறிவுசார் சொத்துக் காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்து உள்ளன.

Ø புத்தாக்க மையம் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது - சுதா மற்றும் சங்கர் புத்தாக்க மையத்தை இந்திய அரசின் குடியரசு துணைத் தலைவர் திரு.ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார்.

Ø புத்தாக்க மையம் இரண்டு புதிய போட்டி அணிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. டீம் அபியுதய்- ராக்கெட்ரி அணி, டீம் அக்னிரத்- சோலார் ரேசிங் கார் அணி. கணித கிளப், இணையப் பாதுகாப்பு கிளப் என்ற இரு கிளப்புகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

Ø கோயம்புத்தூரில் நடைபெற்ற 'ஃபார்முலா பாரத் - 2023' நிகழ்வில் டீம் ரப்தார் ஃபார்முலா ரேசிங் அணி பங்கேற்றது. மின்சார வாகனப் பிரிவில் முதன்முறையாகக் கலந்துகொண்டு, ஒட்டுமொத்த அளவில் 3-வது இடத்தைப் பிடித்தது.

Ø 2022-ம் ஆண்டு கோடைக் காலத்தில் 1,400-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் அனைவருக்குமான திறந்தவெளி கோடை வகுப்புகளை புத்தாக்க மையம் முதன்முறையாக நடத்தியது.

முற்றிலும் இக்கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பிளாக்செயின் அடிப்படையிலான வாக்களிப்பு முறையைக் கொண்டு, வெப்ஆப்ஸ் அண்ட் பிளாக்செயின் கிளப் (WebOps and Blockchain Club) 2022-ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தலை நடத்திமுடித்துள்ளது. தற்போது ஐஐடி மெட்ராஸ்-ன் அனைத்து மாணவர்களின் சமூக செயல்பாடுகளுக்காக இன்ஸ்டிஸ்பேஸ் ஆப் (InstiSpace app) எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தற்போது 5,000-க்கும் மேற்பட்டோர் பயனர்களாக இருந்து வருகின்றனர்.

***

SRI/DL


(Release ID: 1906114) Visitor Counter : 166


Read this release in: English