சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ்-ன் சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையம், தனித்துவமான தொழில்நுட்பம் சார்ந்த சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டிற்காக எஸ்என்எஸ் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது
Posted On:
09 MAR 2023 3:49PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையம் (CoERS), எஸ்என்எஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, சாலைப் பாதுகாப்பில் மனித நடத்தை பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை குறித்து ஆய்வுசெய்யப்பட உள்ளது. குறிப்பாக பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
ஏறத்தாழ 2,000 ஓட்டுநர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கும் இலக்குடன், ஐஐடி மெட்ராஸ் சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையம், எஸ்என்எஸ் அறக்கட்டளை இடையே 1 மார்ச் 2023 அன்று ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இந்த கூட்டு முயற்சியின் தொடக்கத்தில் பேசிய, ஆனந்த் குழுமத்தின் தலைவரும், எச்எல்மெயில் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநருமான திரு. எஸ்.சாரதி கூறும்போது, "பாதுகாப்பு அமைப்புகளில் பணிபுரியும் வாகன உதிரிபாக உற்பத்தியாளர் என்ற முறையில், சாலைகளில் நிகழும் விபத்துகள், உயிரிழப்புகள் எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையத்துடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு, இந்தியாவில் உள்ள சாலைகளை பாதுகாப்பானதாக மேம்படுத்த சமூகப் பொறுப்புள்ள நிறுவனங்களாக செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் பாதுகாப்பான சாலைகளை நோக்கிய பயணத்தில் நீண்டகாலம் பங்களிப்பை வழங்க விரும்புகிறோம்" என்றார்.
இந்த ஒத்துழைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள்:
- சிமுலேட்டர் அடிப்படையிலான பாடத்திட்டத்தை உருவாக்கி, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பேருந்துகள், வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பதை அறிந்து கொள்ளும் வயதில் உள்ள குழந்தைகளுடன் தொடர்பு இருப்பதால் ஓட்டுநர்களுக்கான ஒழுக்கம், நடத்தைகளைக் கடைபிடிக்கச் செய்தல்.
- சாலைப் பாதுகாப்புத் துறையில் உள்ள யோசனைகளை வளர்த்தெடுத்து அவற்றை தயாரிப்புகளாக முதிர்ச்சியடையச் செய்யும் வகையில், சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையத்தின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பயன்படுத்தி கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்துதல். அதில் கண்டறியப்படும் நல்ல யோசனைகளை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்துதல்.
இதுபோன்ற ஒத்துழைப்பின் அவசியம் குறித்து விளக்கிய ஐஐடி மெட்ராஸ் டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) பேராசிரியர் மனு சந்தானம் கூறும்போது, "நல்ல சாலைகள் உள்ளபோதும் ஆங்காங்கே நிகழும் சாலை விபத்துகள் குறித்து சமீப காலமாக செய்தி ஊடகங்களில் அதிகளவில் செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எத்தனையோ விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. வாகன ஓட்டிகளின் நடத்தை மற்றும் சாலைப் பாதுகாப்பு அம்சங்களில் ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது" என்றார்.
பேராசிரியர் மனு சந்தானம் மேலும் கூறுகையில், "போடப்பட்டுள்ள சாலைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச் செல்வதும் அவசியமாகிறது. கொள்கைகளை வகுப்பது உள்ளிட்ட வெவ்வேறு பணிகளை வெவ்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டும். ஓட்டுநரின் நடத்தை தொடர்பான அம்சங்கள், பாதுகாப்பான வாகன இயக்கம் குறித்து மக்களை புரிந்துணரச் செய்தல் போன்றவை குறித்து இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐஐடி மெட்ராஸ் ஆய்வுகளை மேற்கொள்ளும். இறுதியில் வெவ்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பணியாற்ற வேண்டியது அவசியம். 'சாலை விபத்துகளே ஏற்படாது' என்ற இலக்கை எட்டுவதில் உள்ள சவால்களை எடுத்துரைக்க சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது" என்றார்.
இந்த முன்முயற்சிக்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்டுள்ள ஐஐடி மெட்ராஸ் பொறியியல் வடிவமைப்புத் துறையில் ஆர்பிஜி லேப்ஸ் பேராசிரியரும், சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையத்தின் தலைவருமான பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் இதற்கான ஏற்பாடுகள் குறித்து கூறுகையில், "வாகனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் இவை இரண்டிலும் மக்களின் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டுதான் சாலைகள் பாதுகாப்பானதாக அமையும். வாகனங்கள் மற்றும் சாலைப் பொறியியலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அடைந்துள்ள நிலையில், மனித நடத்தை அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால்தான், ஓட்டுநர்கள் குழந்தைகளை பள்ளிக்குச் அழைத்துச் செல்லும்போது அவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வகையில் ஓட்டுநர்களுக்கான பயிற்சிகளை அளிக்க நாங்கள் விரும்புகிறோம். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் பயனடைவது மட்டுமின்றி, ஆட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு குறிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு ஒரு பயிற்சிக் கையேடாக அமையும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
###
(Release ID: 1905314)
Visitor Counter : 179