சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பெண் படித்தால் அடுத்த தலைமுறை வளரும் : டாக்டர் கனிமொழி என் வி என் சோமு எம்.பி
प्रविष्टि तिथि:
08 MAR 2023 8:17PM by PIB Chennai
பெண்கள் படித்தால் அடுத்த தலைமுறை வளரும் என்று டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. கூறியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் இணைந்து சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்திய “பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் பாலின சமத்துவம்” என்ற 3 நாள் கருத்தரங்கின் நிறைவு நாளான இன்று (08.03.2023) டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு தலைமை உரையாற்றினார்.
அவர் பேசும் போது, பெண்கள் சிறந்தவர்களே என்றும் பெண்களை பலவீனமான பாலினமாக தோன்றச் செய்ய ஆண்கள் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார். பெண்களை மதிக்க வேண்டும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலை தற்போது இல்லை. அந்தக் காலக்கட்டத்தில் எனது தாயார் எனது சகோதரரையும் என்னையும் மருத்துவம் படிக்க வைத்தார். பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கும் போராட வேண்டியிருந்தது.
எனது தந்தையார், சமூக நீதி கோட்பாடுகளுக்கு ஏற்ப பெண்களுக்கு சமஉரிமை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன் விளைவாகவே நான் அரசியலுக்கு வந்து தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறேன்.
அவையில், மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து சிறந்த முறையில் செயலாற்றியதற்காக நான் பெருமை கொள்கிறேன். பெண்கள் கல்வியில் முன்னிலைப் பெற்று வேலை வாய்ப்பிலும் முன்னணியில் இருக்க வேண்டும். பெண்கள், ஆண்களை சார்ந்திருக்காமல் தங்களது உணவுக்கு தாங்களே உழைத்து பெற்ற ஊதியத்தின் மூலம் வாழவேண்டும் என்றார்.
இங்கு குழுமியிருக்கும் மாணவிகள், தங்களது குடும்ப வாழ்க்கையில் ஆண் குழந்தைப் பெற்றெடுக்கும் போது பெண்ணை மதிக்கும் வகையில் வளர்க்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட குணச்சித்திர நடிகர் டாக்டர் வி டி எம் சார்லி பேசும் போது, ஒரு தேசம் உயர்வடைய வேண்டும் என்றால் பெண்கள் உயர வேண்டும். பெண் பாலினம் பலவீனமான பாலினம் அல்ல. பலமான பாலினமாகும். பெண்களின் வலிமையை நான் எனது தாயாரிடமிருந்து தெரிந்து கொண்டேன். தாயே அனைவருக்கும் வலிமையைத் தருகிறார் என்றார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, தலைமை உரையாற்றும் போது, ஆண் பெண் இருவரும் சமம் என்றும், ஆண்-பெண் இருபாலரில்
உயர்வு-தாழ்வு இருக்கக் கூடாது என்றும் கூறினார். குறிப்பாக பெண்களுக்கு சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது. பல தலைமுறைகளாக கிடைக்காத கல்வி, இங்கு அமர்ந்திருக்கும் மாணவிகளில் பலருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அவர்கள் கடினமாக உழைத்து கல்வியை உரிய முறையில் பயன்படுத்தி நேரத்தை வீணாக்காமல் சாதனை புரிய வேண்டும் என்றார்.
முன்னதாக 3 நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத் தலைவர் திரு ஏஆர்ஆர் ராம்நாத் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பக தென்மண்டல இயக்குநர் திரு ஜெ. காமராஜ் நன்றியுரையாற்றினார்.
இந்த 3 நாள் கருத்தரங்கில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, குறும்படப் போட்டி, போஸ்டர் தயார் செய்யும் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.



****
AP/GS/KPG/RJ
(रिलीज़ आईडी: 1905171)
आगंतुक पटल : 585
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English