சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்திய விண்வெளி விமானத் திட்டங்களுக்காக ஏஆர்/விஆர்/எம்ஆர் ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்வெளி வீரர் பயிற்சித் தொகுதியை சென்னை ஐஐடி உருவாக்க உள்ளது

Posted On: 06 FEB 2023 12:20PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்)ஆக்மென்டட் ரியாலிட்டி / விர்ச்சுவல் ரியாலிட்டி / மிக்ஸ்டு ரியாலிட்டி (AR/VR/MR)-ஐப் பயன்படுத்தி இந்திய விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க உள்ளது.

எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும் வகையில் ஐஐடி மெட்ராஸ்-ல் புதிதாக நிறுவப்பட்டுள்ள  (XTIC)உயர் தொழில்நுட்பங்களை அனுபவமிக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தின் ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பயன்படுத்திக் கொள்ளும்.

இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (XR) மற்றும் இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இஸ்ரோ, ஐஐடி மெட்ராஸ் இடையே அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரோ மற்றும் ஐஐடி மெட்ராஸ் இடையேயான இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களை விவரித்த எக்ஸ்டிஐசி-ஐஐடி மெட்ராஸ் கொள்கை ஆய்வாளரான, ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் எம். மணிவண்ணன் கூறுகையில், "மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களில் குறிப்பாக வடிவமைப்பு சுழற்சியைக் குறைத்தல்,  விண்வெளிச் சூழலை உருவகப்படுத்துதல் போன்றவற்றில் மதிப்புக் கூட்டும் ஆற்றல் எக்ஸ்ஆர் தொழில்நுட்பத்திற்கு உண்டு. உடலியல் அமைப்புகளின் மாதிரிகள், வடிவமைப்பை மேம்படுத்துதல் போன்ற ஆய்வுகளுடன் இதனைத் தொடங்க உள்ளோம். ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் அமைப்பானது ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி தொழில்துறை கூட்டமைப்பு மேம்பாட்டிற்கும் உகந்த்தாக இருந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டுமுயற்சி குறித்து இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மைய (HSFC) இயக்குநர் டாக்டர் ஆர்.உமாமகேஸ்வரன் கூறும்போது, "விண்வெளித் திட்டம் என்பது கல்வியாளர்களுடன் தொடர்பு உடைய ஒன்றாகும். மனித விண்வெளிப் பயணத் திட்டம் உள்ளிட்ட இஸ்ரோவின் திட்டங்களில் ஐஐடி மெட்ராஸ் நீண்ட காலமாக தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஐஐடி மெட்ராஸ்-உடன் பணியாற்றுவது எப்போமே மகிழ்ச்சிக்குரிய விஷயம்" என்றார்.

மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான எக்ஸ்ஆர் தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமின்றி, மனித விண்வெளி விமான மையத்தில் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அதற்கான பயிற்சியை அளிப்பதுடன், மனித விண்வெளி விமான மையத்தில் உள்ள ஆய்வகத்தில் எக்ஸ்ஆர்/விஆர் பரிசோதனைக் கூடத்தை அமைக்கவும் எக்ஸ்டிஐசி உதவும்.

இந்த ஒத்துழைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள்

Ø மனித உடலியல் மற்றும் விண்வெளி அமைப்புகளின் மாதிரியாக்கம் மற்றும் உருவகப்படுத்துதல்

Ø சேவைகளை விரிவாக்கம் செய்தல்

Ø வடிவமைப்பு கட்டமைப்பைக் காட்சிப்படுத்துதல், மேம்படுத்துதல்

Ø இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுக்கான எக்ஸ்ஆர் சிஸ்டமை தாங்களே உருவாக்கிக் கொள்ளப் பயிற்சி அளித்தல்

இந்தியாவில் எக்ஸ்ஆர், ஹாப்டிக்ஸ் துறையில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய CAVE என்ற கூட்டமைப்பை எக்ஸ்டிஐசி உருவாக்கியுள்ளது. எக்ஸ்டிஐசி தலைமையிலான சுற்றுச்சூழல் அமைப்பானது, மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் சேவை விரிவாக்கம் மற்றும் கல்வியில் தொடங்கி டிஜிட்டல் ட்வின்ஸ் (Digital Twins) வரை பல்வேறு அப்ளிகேஷன்களில் பயன்படுத்தக் கூடியதாகும்.

எக்ஸ்ஆர் மற்றும் ஹாப்டிக்ஸ் தொழில்நுட்பத்தில் எக்ஸ்டிஐசி தான் இந்தியாவிலேயே முதலாவது ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்பு மையமாகும். மேலும் பொறியியல், மருத்துவம், உளவியல், கலைகள் ஆகிய பல துறைகளை உள்ளடக்கிய ஒரு இடைநிலை மையமாகவும் திகழ்கிறது. எக்ஸ்ஆர் என்பது இடைநிலையானது என்பதால், இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள் ஒன்றிணைவது அவசியமாகும்.

உலகெங்கும் உள்ள பெரும்பாலான ஆராய்ச்சிக் கூடங்கள் எக்ஸ்ஆர் தொடர்புடைய சாப்ட்வேர் அல்லது ஹார்டுவேரில் கவனம் செலுத்தி வருகின்றன. ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள இந்த மையம் மனிதக் காரணிகள், குறிப்பாக உணர்தல் மற்றும் மாயை ஆகிய அடிப்படைக் கூறுகளில் கவனத்தை செலுத்துவதுடன், புத்தம் புதிய துறையான புலன் உணர்வுப் பொறியியல், புலன் உணர்வு இயற்கணிதம் ஆகியவற்றில் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது.

 

****



(Release ID: 1896548) Visitor Counter : 152


Read this release in: English