சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அறிவியல்-20-ன் (எஸ்20) செயல்பாட்டுக் குழுவின் தொடக்கக் கூட்டம் புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற்றது

Posted On: 01 FEB 2023 3:36PM by PIB Chennai

G20 நாடுகளின் தேசிய அறிவியல் அகாடமிகளை உள்ளடக்கிய S20 செயல்பாட்டுக் குழு, 2017 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பிரசிடென்சியின் போது தொடங்கப்பட்டது. இது சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய பணிக்குழுக்கள் மூலம் ஒருமித்த அடிப்படையிலான அறிவியல் சார்ந்த பரிந்துரைகளை கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குகிறது.

ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இந்தியா, கொரியா குடியரசு, துர்கியே, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 11 G20 நாடுகளிலிருந்து மொத்தம் 15 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்றனர். புதுச்சேரி எஸ் 20 கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 50 பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, ஜி 20 இன் தலைவராக இந்தியா, ஜி 20 உண்மையிலேயே "உள்ளடக்கிய, லட்சியமான, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக" மாற்ற விரும்புகிறது. S20 இன் நிகழ்ச்சி நிரல், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அறிவியலின் திட்டமிடல் மற்றும் பயன்பாட்டில் இந்தக் கொள்கையை பிரதிபலிக்கிறது.

2023 ஆம் ஆண்டிற்கான S20 இன் கருப்பொருள்புதுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு, மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல்ஆகும். இந்த பரந்த கருப்பொருளில், கலந்துரையாடல்கள் மூன்று பகுதிகளில் கவனம் செலுத்தும்: பசுமையான எதிர்காலத்திற்கான தூய எரிசக்தி, உலகளாவிய முழு ஆரோக்கியம், அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைப்பது ஆகியவை தொடர்பாக அடுத்தடுத்த கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்படும். அகர்தலா, லட்சத்தீவின் பங்காரம் தீவு, மத்தியப் பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறும். இறுதிக் கூட்டம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) இயக்குநர் பேராசிரியர் ஜி ரங்கராஜனின் வரவேற்புரையுடன் தொடக்கக் கூட்டம் தொடங்கியது. "எப்போதும் பெரும் சவால்களான - பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள், எரிசக்தி பாதுகாப்பு, நீர் மேலாண்மை, உணவுப் பற்றாக்குறை - ஆகியவற்றை ஒரு நாட்டினால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இதற்கு பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, இதனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உள்ள அனுபவங்கள் மற்றும் முன்னேற்றங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும், ”என்று அவர் கூறினார்.

வலுவான கூட்டாண்மை, பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய கூட்டணி மூலம் நமது சொந்த எல்லைகளுக்குள்ளும், அதற்கு அப்பாலும் அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் நாங்கள் ஆழ்ந்த உறுதியுடன் இருப்பதால் நாங்கள் இங்கு கூடியுள்ளோம்" என்று இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா கூறினார்.

IIT டெல்லியின் பொதுக் கொள்கைப் பள்ளியின் நிறுவனத் தலைவரான பேராசிரியர் அம்புஜ் சாகர், இந்த ஆண்டின் S20-ன் இரண்டாவது கருப்பொருள் - சுத்தமான ஆற்றல் பற்றி பேசினார். பசுமையான எதிர்காலம் மட்டுமல்ல, நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தையும் நோக்கிச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், "நிலைத்தன்மையுடன், கிடைக்கும் தன்மை, அணுகல் மற்றும் மலிவுத்தன்மை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்றார் அவர்.

ஒவ்வொரு அமர்வையும் தொடர்ந்து ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடந்தன. பல G20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கருத்துக்கள், பரிந்துரைகளை எடுத்துரைத்தனர்.

****(Release ID: 1895452) Visitor Counter : 172


Read this release in: English