சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பொதுவான கல்வி இலக்குகளை எட்டுவதற்கு தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்துமாறு மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்
சென்னை ஐஐடி கருத்தரங்கு: கற்றல் முறைகளை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்பாடு குறித்து ஜி20 உறுப்பினர்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்
Posted On:
31 JAN 2023 6:39PM by PIB Chennai
ஜி20 அரசுத் தலைவர்களின் கீழ் கல்விப் பணிக்குழுவின் முதலாவது கூட்டம் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற மையப் பொருளில் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற்ற கருத்தரங்கத்துடன் தொடங்கியது.
சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஜி20 நாடுகளின் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கொண்ட கண்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 அரங்குகள் உள்ளன.
இன்றைய கருத்தரங்கை தொடங்கி வைத்து சென்னை ஐஐடி இயக்குநரும், ஆராய்ச்சிப் பூங்காவின் தலைவருமான பேராசிரியர் வி காமகோடி உரையாற்றினார். பள்ளிக் கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஜி20 நாடுகளின் சிறந்த நடைமுறைகள், சவால்கள் பற்றியும் தரமான, சமத்துவமான கல்வியை அனைவருக்கும் அளிப்பது பற்றியும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி, பொதுவான கல்வி இலக்குகளை எட்டுவதற்கு தொழில்நுட்பத்திற்கு கூடுதல் ஊக்கமளிக்க ஜி20 உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ‘மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்போருக்கு எளிதில் அணுகவல்ல சமமான கல்வி அளித்தல்’ என்ற அமர்வுக்கும், செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
மத்திய அரசின் திறன்சார் கல்வித் துறையின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, ‘திறன்சார் கல்வி மற்றும் பயிற்சி வழங்க உருவாகும் தொழில் நுட்பங்கள்’ என்ற அமர்வுக்குத் தலைமை தாங்கினார். செய்முறைப் பயிற்சி மற்றும் பரிசோதனைக் கல்விக்கான தேவையையும் பள்ளி மற்றும் உயர்கல்வியில் திறன் சார் கல்வியை ஒருங்கிணைப்பதன் அவசியத்தையும் இந்த அமர்வில் அவர் கோடிட்டுக் காட்டினார்.
விரிவான முறையில் உயர்தரமான உயர்கல்வி கற்றல் வாய்ப்புகளை வழங்குதல் குறித்த அமர்வுக்கு தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் திரு அனில் சஹஸ்ரபுதே தலைமை தாங்கினார். இணைப்பு மற்றும் அடிப்படை கல்வியை கட்டமைப்பதன் சவால்களில் இந்த அமர்வு கவனம் செலுத்தியதோடு, விரும்புகின்ற வகையில் கற்றல் விளைவுகளை ஏற்படுத்துவதற்கு தேவைப்படும் நெகிழ்வுத்தன்மை மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் விவாதித்தது.
சென்னை ஐஐடி பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் உரையாற்றுகையில், அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வது, டிஜிட்டல் தலையீட்டின் பங்கு, கற்போருக்கான மகிழ்ச்சியின் தேவை, தேவைப்படும் திறன்களுடன் பட்டதாரிகளை உருவாக்குவதன் தேவை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டினார்.
இந்த முழுநாள் கருத்தரங்கில் ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகள், ஜி20 உறுப்பு நாடுகளின் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் தரமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும், கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் பற்றி இதில் விவாதிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகள், சென்னை ஐஐடி வளாகம், குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக இந்த கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியை சித்தரிக்கும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐஐடி சென்னை பாரம்பரிய மையம் ஆகியவற்றை பார்வையிடும் வாய்ப்பை பெற்றனர்.
சென்னை ஐஐடி-யின் சுதா கோபாலகிருஷ்ணன் அறிவுசார் மையத்தில் மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்ப ஆய்வு, மாணவர்களால் நடத்தப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையத்தில் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் ஆகியவையும் கல்வி பணிக்குழு பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டன.
நாட்டின் வளமான பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐஐடி வளாகத்தில் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ காலத்திலான கல்விப் பணிக்குழு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல், பணியின் எதிர்காலம், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் ஒத்துழைப்பு ஆகிய 4 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.
சென்னையைத் தவிர இந்தப் பணிக்குழுவின் கூட்டங்கள், அமிர்தசரஸ், புவனேஸ்வர், புனே ஆகிய இடங்களில் நடத்தப்படுவதோடு, நிறைவாக கல்வித்துறை அமைச்சர்கள் நிலையிலான கூட்டமும் புனேயில் நடத்தப்படவுள்ளது.
பணிக்குழுவின் வழக்கமான கருத்துரைகளோடு, நான்கு முன்னுரிமைப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன. ஜி20 அமைப்பின் உறுப்புநாடுகள், விருந்தினர் நாடுகளின் துறைவாரியான நிபுணர்களின் உள்ளீடுகள் மூலம் கல்விப் பணிக்குழுவின் விவாதங்கள் செறிவாக்கப்படும். நிகழ்வுகளுக்கு இடையேயான கண்காட்சிகள், சிறந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவும்.

**********
AP/SMB/PK/GK
(Release ID: 1895176)
Visitor Counter : 193