சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கை நடத்த உள்ளது
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்துவரும் நிலையில், ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடையே சாத்தியமான ஆராய்ச்சி, கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள் மற்றும் கருப்பொருள்களைக் கண்டறியும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Posted On:
28 JAN 2023 5:18PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) தனது ஆராய்ச்சிப் பூங்காவில் (Research Park) 31 ஜனவரி 2023 அன்று 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு ஒன்றை நடத்த உள்ளது. ஜி20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த கொள்கைகளை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும்.
சென்னையில் 31 ஜனவரி 2023 முதல் 2 பிப்ரவரி 2023 வரை நடைபெற உள்ள பிரதிநிதிகள் சந்திப்பு- முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டத்தின் (Sherpa Track - 1st Education Working Group Meeting) ஒரு பகுதியாக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் (IIT Madras Research Park - IITMRP) ஜி20 கருத்தரங்கு நடைபெறுகிறது. ஜி20 உறுப்பு நாடுகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் இடையே, ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள் மற்றும் கருப்பொருள்களை அடையாளம் காண்பதை இந்தியத் தலைமையின் கீழ் இயங்கும் ஜி20 கல்விப் பணிக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாபெரும் இந்நிகழ்வையொட்டி ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி, புதுமை, திறன் சார்ந்த அம்சங்கள் இந்த அரங்குகளில் இடம்பெற்று இருக்கும். கருத்தரங்கில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தையும் பார்வையிட உள்ளனர். புதிதாகப் புதுப்பிக்கப்பட்டு உள்ள ஐஐடி மெட்ராஸ் ஹெரிடேஜ் சென்டரில் இருந்து இக்கல்வி நிறுவனத்தின் பல ஆண்டுகால வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
ஐஐடி மெட்ராஸ் 'சுதா கோபாலகிருஷ்ணன் ப்ரெயின் சென்டரில் நடைபெற்றுவரும் அதிநவீன ஆராய்ச்சிகள், மாணவர்களால் நடத்தப்படும் புத்தாக்க மையத்தில் (CFI) இடம்பெற்றுள்ள கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட உள்ளனர். மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களைத் தவிர பல்வேறு ப்ராஜக்ட்டுகளில் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். நாட்டின் வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இக்கல்வி நிறுவன வளாகத்தில் கலாச்சார அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (28 ஜனவரி 2023) செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றில் சமூக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் மதிப்புமிக்க சர்வதேசக் கருத்தரங்கு நடைபெறுவதை இக்கல்வி நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகக் கருதுகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கல்விக்காகப் பயன்படுத்துவதில் இக்கல்வி நிறுவனத்திற்கு சிறந்ததொரு வரலாறு உண்டு. தடைகளைத் தகர்த்தெறிந்து அனைவரும் தரமான கல்வியைப் பெறும் வகையில், புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டத்தில் ஆன்லைன் முறையில் பி.எஸ். பட்டம் வழங்கும் திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக கடந்த 2020ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியது" எனக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் காமகோடி மேலும் கூறுகையில், "மாணவர்களின் கற்றல் வாய்ப்புகள் மற்றும் விளைவுகளை மேம்படுத்தும் விதமாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வலுப்படுத்துதல், சிறப்புக் குழந்தைகளின் கல்விக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற அம்சங்கள் குறித்து ஜி20 கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படும். ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை தரமாக வழங்குவது எப்படி என பங்கேற்பாளர்கள் விவாதிப்பார்கள்" எனக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கற்றல் வாய்ப்புகள், கற்றல் விளைவுகள் ஆகியவற்றை விரிவுபடுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்த முடியும் எனக் கருத்தரங்கின்போது கலந்துரையாட உள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய, தரமான கல்வியை அடைவதற்கு ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், நிலையான 4 வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goal 4 - SDG4) குறித்து விவாதிக்கப்படும்.
கருத்தரங்கில் பங்கேற்க உள்ளோர்
Ø ஜி20-யின் உறுப்பினர் நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஜி20 கல்விக்கான பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள்
Ø அனைவருக்கும் தரமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்யவும், கற்றல் விளைவுகளை மேம்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜி20 உறுப்பினர் நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள்
Ø யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி, OECD போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள்
Ø இந்தியாவில் இருந்து அறிவுசார் பங்குதாரர்களின் பிரதிநிதிகள்
கடந்த சில ஆண்டுகளில், அனைத்து ஜி20 உறுப்பு நாடுகளும் கல்வி அணுகல் மற்றும் கற்பித்தல்-கற்றல் செயல்முறையை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. SDG4-கல்வி 2030 என்ற இலக்கை எட்ட வேண்டுமெனில், கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல், வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல், கற்றல் குறைபாடுகளைக் குறைத்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காண்பது அவசியமாகும்.
*****
DL
(Release ID: 1894310)
Visitor Counter : 194