சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்

தமிழக கல்வித் துறையின் நான் முதல்வன், நம் பள்ளி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அரங்குகள் கண்காட்சியில் பங்கேற்பு

ஐஐடியில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்த கருத்தரங்கு

Posted On: 27 JAN 2023 3:07PM by PIB Chennai

ஜி-20 கல்விப் பணிக்குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக 2023 ஜனவரி 31 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு” குறித்த கருத்தரங்கு நடைபெறும். இதைத்தொடர்ந்து உலகளாவிய தளத்தில் கல்வித்துறையில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய  கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு ஜி-20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், யுனெஸ்கோ, யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகள் ஆகியவற்றின் 63 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், கல்வி அமைச்சகம், என்சிஇஆர்டி போன்றவற்றின் அதிகாரிகள், கல்வித்துறை நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

சென்னை ஐஐடியில் நடைபெறும் கருத்தரங்கத்திற்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி தலைமை வகிப்பார். தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறையை அனைத்து நிலையிலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தரம் உள்ளதாகவும், ஒத்துழைப்புடையதாகவும் மாற்றுவது. இந்தக் கருத்தரங்கின் முன்னுரிமை மையப்பொருளாக  இருக்கும். ஜி-20 உறுப்பு நாடுகளிலும், வரவேற்கப்பட்ட நாடுகளிலும்  பின்பற்றப்படுகின்ற சிறந்த நடைமுறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் சென்னை ஐஐடியின் இயக்குனர் பேராசிரியர் காமகோடி விவரிப்பார்.

மழலையர் பள்ளியில் இருந்து 12-ம் வகுப்பு வரை கற்போருக்கு எளிதாகவும், சமமாகவும் கல்வி கிடைக்கச் செய்தல்

உயர்தர கற்றல் வாய்ப்புகள் கிடைக்கச்செய்தல்

திறன்சார் கல்வி மற்றும் பயிற்சி அளிக்க உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள்

  • என்ற மூன்று அமர்வுகளில் குழு விவாதம் இந்தக் கருத்தரங்கில் நடத்தப்படவுள்ளது.

கல்வித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை  பயன்படுத்துவதில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகள் பற்றி ஜி-20 உறுப்பு நாடுகளும், விருந்தினர் நாடுகளும் காட்சிப்படுத்துவதற்கு முதல் முறையாக இந்தியா தனித்துவமான தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.  இந்தக் கண்காட்சியில் 50க்கும் அதிகமான அரங்குகள் இடம் பெற்றிருக்கும்.

தமிழ்நாட்டில் இருந்து மாநில கல்வித்துறையின் நான் முதல்வன், நம்மப்பள்ளி திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறும். மத்திய அரசின் இந்திய ஸ்வையம், சமர்த், தீக்ஷா போன்ற திட்டங்கள் பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உபகரணங்கள் தயாரிக்கும்  ஸ்டார்ட் அப் இந்தியா நிறுவனங்கள் மற்றும் சவுதிஅரேபியா, பிரான்ஸ், சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்கவுள்ளன.

ஜி-20 கல்விப்பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பிப்ரவரி 1 அன்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட உள்ளனர். நடன நிகழ்ச்சிகள் உள்பட தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் இசைஇரவுகளுக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***



(Release ID: 1894125) Visitor Counter : 161


Read this release in: English