சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னையில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தொலைத் தொடர்பு அமைப்பு கண்டுபிடிப்பு
Posted On:
13 JAN 2023 5:04PM by PIB Chennai
சென்னையில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தொலை தொடர்பு அமைப்பை மத்திய தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், சென்னை பிஎஸ்என்எல் மற்றும் தனியார் தொலைத் தொடர்பு அதிகாரிகள், தமிழக காவல் துறையினருடன் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்த 3 இடங்களிலும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தொலைத் தொடர்பு அமைப்பை அவர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக சிம்-கார்டுகளை பயன்படுத்தக் கூடிய 15 பெட்டிகள், 1000-த்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் சிம்கார்டுகள், தொலைத் தொடர்பு இணைப்பு வழங்குவதற்கான 12 கம்பியில்லா இணைப்புப் பெட்டிகள், போலி சிம்கார்டுகள் மற்றும் இதர உபகரணங்களை அந்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமாக இந்த தொலைத் தொடர்பு அமைப்பை கட்டமைத்து இணைய வழி மூலம் சர்வதேச அளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது போன்ற சர்வதேச அழைப்புகளால் உள்ளூர் தொலைபேசி சேவையை வழங்கும் முகவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து 1800 110 420/1963 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள தொலைத் தொடர்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
AP/RR/RJ
(Release ID: 1891011)
Visitor Counter : 152