சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்: சித்தர் திருநாள் விழாவையொட்டி திருச்சிராப்பள்ளியில் சித்த மாரத்தான் ஓட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 JAN 2023 1:27PM by PIB Chennai
“ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்” என்ற தலைப்பில் சித்தர் திருநாள் விழா நடைபெறுவதையொட்டி திருச்சிராப்பள்ளியில் ஜனவரி 8 அன்று சித்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதற்கான விழாவில் மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், காணொலி காட்சி மூலம் கெளரவ விருந்தினராக பங்கேற்றார். மத்திய ஆயுஷ் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு முஞ்சபாரா மகேந்திர கலுபாய், திருச்சி மக்களவை உறுப்பினர் திரு. சு. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் பிரமோத் குமார் பதக் தலைமை தாங்கினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2023 ஆம் ஆண்டினை, சிறுதானிய பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளது, இவ்வேளையில் ஆறாவது சித்தர் தினத்திற்கான குறிக்கோளாக “ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்” என்ற கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், நோயாளிகளின் புள்ளிவிவர அடிப்படையில் நாட்டிலுள்ள அனைத்து ஆயுஷ் நிறுவனங்களிலும் இது முதலிடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அதன் குறைபாடற்ற மற்றும் தரமான சேவைக்காக சுகாதாரப் பராமரிப்புக்கான தேசிய அங்கீகார விருதைப் பெற்ற முதல் அரசு நிறுவனமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தேசிய சித்த மருத்துவ நிறுவனம், 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து சித்த மருத்துவத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பையும் தொடங்குவது, சித்த மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், சித்த மருத்துவ முறையை நாடு முழுவதும் பரப்புவதற்கும் வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய இணை அமைச்சர் திரு முஞ்சபாரா மகேந்திர கலுபாய் பேசுகையில், சார்ஸ்- கொவிட் 2, கொவிட் 19 போன்ற தொற்றுநோய் மற்றும் தொற்றாத நோய் மேலாண்மையில் சந்தேகத்திற்கு இடமின்றி மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் சித்த மருத்துவ செயல்முறை திறன்பட பங்காற்றியுள்ளது என்றார். கொவிட்-19 நோய் தொற்றானது உலகளாவிய ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பாரம்பரிய சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பியுள்ளது என்றும், இது சித்த மருத்துவத்திற்கு பலம் சேர்க்கும் வாய்ப்பாக தற்போது மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சித்த மருத்துவத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் சித்தர்களால் வலுவாகக் கூறப்பட்டுள்ளது, திருக்குறளில் மருத்துவத்திற்கான 10 குறள் ஒதுக்கப்பட்டு அதில் 7 குறள்களில் சரியான உணவு முறை, உணவின் முக்கியத்துவம் மற்றும் உணவுப் பணிகள் பற்றி கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக: மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் என்பதைக் கூறலாம். முன் உண்ட உணவு செரித்த தன்மை அறிந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை என்பது இதன் பொருளாகும்.
சித்த மருந்துகளின் தரத்தை மேம்படுத்த, இந்திய தரநிர்ணய அமைவனத்தின் தரநிலைகளை ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கி வருகிறது. சித்த மருந்துகளின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இந்த முயற்சிகள் சித்த மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று அமைச்சர் திரு கலுபாய் தெரிவித்தார்.
இந்த விழாவில், சித்த மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர்(கூடுதல் பொறுப்பு), மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஆர். மீனாகுமாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1889728)
வருகையாளர் எண்ணிக்கை : 1255