சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.148 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் கிஷன் ரெட்டி

Posted On: 13 DEC 2022 3:35PM by PIB Chennai

சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் தனியார் விடுதியில், புதுச்சேரி சுற்றுலாத்துறை நடத்திய சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா,  ஆன்மீகச் சுற்றுலா மேம்பாட்டுக்கான நான்கு திட்டங்களை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆன்மீகத் தலமாக புதுச்சேரி உள்ளது. ஆன்மீகச் சுற்றுலா சிறப்பாக உள்ள இங்கு, சுகாதார சுற்றுலாவையும் கல்வி சார்ந்த முதலீடுகளையும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. புதுவை அரசு விருந்தோம்பல் தொழில் மற்றும் சேவை மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆண்டின் 365 நாட்களும் சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்று உலகுக்கு உணர்த்தி வருகிறோம். சுற்றுலாத்துறை பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் சுற்றுலாத் தொழில் தொடங்கினால் 80 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆகவேதான் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சுற்றுலாவானது பயங்கரவாதப் போக்கை  தடுக்கும் (Tourism will prevent terrorism) என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். புதுவையின் புதுமைக்கு சுற்றுலா அடித்தளமாக இருக்கிறது. மத்திய அரசின் முயற்சியால் புதுச்சேரி விரைவில் சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி விளங்கும் என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி முதலமைச்சர் திரு ந.ரங்கசாமி பேசுகையில், சுற்றுலா வளர்ச்சியில் தனியார் பங்கேற்பு அவசியமானது என்றார். தனியார் முதலீட்டாளர்களுக்கு வேண்டிய உதவிகளை மாநில அரசு விரைந்து செய்து தர வேண்டும். இதில் உள்ள தடங்கல்களை மத்திய அரசு நீக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஆர்.செல்வம், அமைச்சர்கள் திரு.க.லட்சுமி நாராயணன், திரு.க.ஜெயக்குமார், திருமதி.ச.சந்திர பிரியங்கா, திரு.சாய் ஜே. சரவணகுமார், சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள், சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டு உள்ள முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுலா குறித்த விளக்கவுரையை சுற்றுலா செயலர் திரு.அருண் வழங்கினார்.

புனரமைக்கப்பட்டு மின்னொளி அமைக்கப்பட்ட ஆயி மண்டபம், நீலக் கொடி சான்றிதழ் பெற்ற ஈடன் கடற்கரை, திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு வசதிகள் மற்றும் நதிக்கரை படித்துறை, திருநள்ளாறு ஆன்மீகப் பூங்கா ஆகியவற்றை அமைச்சர் கிஷன் ரெட்டி தொடங்கி வைத்ததோடு புதுச்சேரி வணிகத் திருவிழா 2022-23 இன் விளம்பரச் சின்னத்தையும் வெளியிட்டார்.

***************

SK/AP/RR/IDS


(Release ID: 1883064) Visitor Counter : 201
Read this release in: English