சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழின் பெருமையை உலக அரங்குகளில் பறைசாற்றி வரும் பிரதமர் - காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புகழாரம்
प्रविष्टि तिथि:
04 DEC 2022 4:06PM by PIB Chennai
பாரதத்தாயின் நாவில் இருக்கும் தமிழ் மொழியின் பெருமையை நன்கு உணர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, உன்னதமான தமிழ் மொழியைக் கவுரவிக்கும் வகையில், உலக அரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், திருக்குறள், சங்க தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசி வருகிறார் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான புராதனமான தொடர்பை எடுத்துக்கூறி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், இன்று நடைபெற்ற கோவில்களின் கட்டடக்கலை குறித்த கருத்தரங்கில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு;
நாம் அனைவரும் பாரத மக்கள்தான். இதில் எந்த வித பேதமும் இல்லை. வேறுபாடும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் ஒரு மொழி பேசலாம். வீடுகளில் பின்பற்றப்படும் பண்பாடு வேறு, வேறாக இருக்கலாம். இருந்தாலும் நாம் அனைவரும் பாரதத்தாயின் மக்களே. அதனால்தான் நமது பிரதமர் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சொற்றொடரை முன்வைத்தார். அதை இந்தியில், ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத் என்று கூறுகிறோம்.
நமது மதங்கள் வேறாக இருந்தாலும், அடிப்படையில் நமது கலாச்சாரம் ஒன்றுதான்; நம்பிக்கை ஒன்றுதான். நதிகளை மதிக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும். பகிர்ந்து உண்ண வேண்டும். விலங்குகள், மரம், செடி, கொடிகள் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டும். அசையும் உயிர்களையும், அசைவற்ற உயிர்களைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் நாம் வணங்குகிறோம் என்பது நமது பண்பாடு. அந்தப் பண்பாடுதான் நம்மை முக்கியமாக ஒற்றுமைப்படுத்துகிறது. வடக்கின் வேர்கள், தெற்கின் வேர்கள், வடகிழக்கு இந்தியா இதெல்லாம் வேறு வேறு இல்லை. மொழி, வேறு வேறாக இருந்தாலும் அடிப்படையில் இதுதான். வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் அருந்தக் கொடுப்பது, உணவு அளிப்பது, குழுந்தைகளை மதிப்பது ஆகிய உணர்வுகள் நம் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.
ஆனால், நம்மைப் பிரிப்பதற்காக கூறப்படும் வேறுபாடுகள் இடைக்காலங்களில் கையாளப்படும் உத்தியே தவிர, அதில் உண்மை இல்லை. இதை இன்றும் அரசியலில் சிலர் கூறிவருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், சரியான உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு. அதனால் தான் காசி தமிழ் சங்கமம் போன்ற கூட்டங்களில், காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதை நாம் எடுத்துச் சொல்கிறோம்.
PhotoT7BM.jpeg)
நீண்ட காலமாக, இசை மூலமாக எப்படி தொடர்புகளை வளர்த்தார்கள் என்பதை காசியில் நடப்பதுதான் காஞ்சியில் நடக்கிறது என்று காணும் போது உணர முடிகிறது. இரண்டு உயர்ந்த கல்வி மையங்களாக காஞ்சியும், காசியும் இருந்துள்ளன. உன்னதமான பல்கலைக்கழகங்கள் என்று பேச ஆரம்பித்தால், பீகாரில் இருந்த நாளந்தா, அதை அழித்து விட்டனர், ஆனால், அதன் சின்னங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டன. கல்விக்கு ஆதாரம் இருக்கக்கூடாது, கல்விக்கு பயன்படக்கூடிய சாதனங்கள் இருக்கக்கூடாது என அவற்றை எரித்தார்கள்.
காசியில் இன்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படிப்பது மட்டுமல்லாமல், கலைகள் வளர்க்கப்படுகின்றன. குமரகுருபரர் இங்கு வந்து கோயிலைக்கட்டிவிட்டு, அதற்குப்பின்னர் அங்கு சென்று தருமபுரம் ஆதினத்தை நிறுவினார். காதில் கேட்டதை, அங்கும் பகிர வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். ஞானம் என்பது பகிரப்பகிர அதிகமாகும். காதால் கேட்டதை நமக்குள்ளேயே அறிந்து கொண்டதன் மூலம், தமிழில் பல கவிதைகள் உருவாகின.
இத்தகைய எண்ணங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே காசி தமிழ் சங்கமம். காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே புராதனமாக நிலவிய தொடர்புகளை அழகிய தமிழில் சிறு, சிறு விளக்கங்களுடன் ஹேமா ஹரி எழுதி இருக்கிறார்கள். அதை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதை எடுத்துச் சென்று அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
எதிர்மறையாக பேசுபவர்கள், தவறாக பேசுபவர்களிடம் இதை ஆதாரமாக காட்ட வேண்டும். இதை திருப்பி, திருப்பி சொல்ல வேண்டும். நான் தமிழ்நாட்டில் சிறு வயது முதல் இருந்து சிலவற்றை அனுபவித்து தெரிந்து கொண்டேன். நமது ஊர்களில், பக்திக்காகவோ, கலைகளை வளர்ப்பதற்காகவோ சில நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். கதா காலேட்சபம், புலி வேடம் கட்டி ஆடுதல், கதைகளை கூறுதல், கோலாட்டம் போன்றவை நடைபெறும். இதையெல்லாம் திரும்பத்திரும்பக் கூறி இந்த கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை எல்லாம் நடத்துவது வழக்கம். சிறுவர்கள் இதைப்பார்த்து சந்தேகங்களை கேட்பதும், பெரியவர்கள் அதற்கு விளக்கம் கூறுவதும் வாடிக்கை.
கன்றை இழந்த பசு மணியை அடித்து நியாயம் கேட்பது பற்றி கூறும்போது, மாடு பேசுமா எனக் குழந்தை கேட்கும். மாட்டின் கண்ணீர் அதைக் காட்டும் என்று அம்மா விளக்கம் கூறுவார்கள்.
எனவே இந்த ஆதாரத்தை எல்லாம் எடுத்துக்காட்டி, உண்மைக்குப் புறம்பாக பேசாதீர்கள் என அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு. நமது பிரதமர், திருக்குறள், சங்க இலக்கியங்கள், புறநானூறு, அகநானூறு ஆகியவற்றை எடுத்து ஒவ்வொரு சபையிலும் சொல்லி வருகிறார். அதைப்பார்க்கும் போது, நமக்கு பெருமையாக உள்ளது.
அவர் ஒவ்வொரு பாரம்பரியத்துக்கும் மதிப்பு அளித்தாலும், தமிழ் என்று வரும்போது, அது பாரதத்தாயின் நாவில் இருக்கும் மொழி எனப்புரிந்து கொண்டு அதைப் போற்றி வருகிறார். நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் இதை அவர் கூறுகிறார். ஆனால், சிலர் இந்தி திணிப்பு என விதண்டாவாதம் பேசுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக நமது பழம்பெரும் கலாச்சாரத்தை மறந்து விடுவதா, அல்லது அதை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விடுவதா எனப்பார்க்கும் போது, இந்த தமிழ் சங்கமத்தின் முக்கியத்துவம் நமக்கு புரியும். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து, காசியில் தமிழ் மக்களை எவ்வாறு வரவேற்கிறார்கள் எத்தனையோ ஆண்டுகளாக இங்கு இருப்பவர்கள் தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் ஆற்றும் தொண்டு என்ன என்பதைப் புரிந்து கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால்தான் இந்த நாடு முன்னேறும், ஏழ்மை தானாக அகலும் என்ற நமது பிரதமரின் கனவை நனவாக்க பாடுபடுவதுடன், உண்மைகளை அவர்கள் முன்பு எடுத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு திருமதி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
******
SM/PKV/DL
(रिलीज़ आईडी: 1880803)
आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English